- உலகச்செய்திகள், செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரதான வேட்பாளராகிறார்கள் 5 மாநிலங்களில் டிரம்ப் வெற்றி; 4-ல் ஹிலாரி வாகை சூடினார்

பிலடெல்பியா, ஏப். 28:-

அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தொழில்அதிபர் டொனால்ட் டிரம்ப் 5 மாநிலங்களிலும்,  ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் 4 மாநிலங்களிலும் அமோக வெற்றி பெற்றனர்.

்இதையடுத்து வரும் நவம்பர் 8-ந் தேதி நடக்கும் அதிபர் தேர்தலில் இருவரும் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது.

வேட்பாளர் தேர்தல்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிகிறது. அதிபர் தேர்தலில் போட்டியிட ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இதற்கு முன்பாக, இரு கட்சிகளுக்குள் உள்கட்சி தேர்தல் நடத்தி, அதில் பெரும்பான்மை மாநிலங்களில் வெற்றி பெறுவோரை அந்த கட்சிகள் வேட்பாளராக அறிவிக்கும்.

இதுவரை பல மாநிலங்களில் நடந்துள்ள உட்கட்சி  தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி பெரும்பான்மையாக வெற்றி பெற்று முதலிடத்திலும், அடுத்த இடத்தில் பெர்னி சான்டர்சும் உள்ளனர். குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்  அதிக மாநிலங்களில் வாகைசூடி முன்னணியில் இருக்கிறார்.

டிரம்ப்

இந்நிலையில், மேரிலாந்து, கனெக்டிகட், டெலாவேர், பென்சில்வேனியா மற்றும் ரோட் ஐலான்ட் ஆகிய 5 மாநிலங்களில்  நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இந்த 5  மாநிலங்களிலும் ஏறக்குறைய 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிரம்ப் நியமிக்கப்பட 1,237 பிரதிநிதிகளின் வாக்குகள் தேவைப்படும் நிலையில், இன்னும் 300 வாக்குகள் பெற்றால் டிரம்ப்  வேட்பாளராக அறிவிக்கப்படுவார். இவருக்கு போட்டியாக இருந்த டெட்குரூஸ் 569 பிரதிநிதிகள் வாக்குகளையும், ஜான் கேசிச் 153 பிரதிநிதிகள் வாக்குகளையும் பெற்றனர்.

இதற்கிடையே கலிபோர்னியாவில் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நேற்றுமுன்தினம் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது, 5 பேரின் கண்களில் ‘பெப்பர் ஸ்பிரே’ அடிக்கப்பட்டது. இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

ஹிலாரி
ஆளும் ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன்  ரோட் ஐலான்ட் மாநிலத்தைத்  தவிர, மற்ற 4 மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றார். இதுவரை 2,141 வாக்குகள் பெற்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படும் கட்டத்துக்கு ஹிலாரி நெருங்கியுள்ளார்.
இவருக்கு கடும் போட்டி அளித்துவரும் வெர்மான்ட் தொகுதி எம்.பி. பெர்னி சான்டர்ஸ் ரோட் ஐலான்ட் மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார். இவர் இதுவரை 1,321 பிரதிநிதிகளின் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

பாக்ஸ் மேட்டர்….

நான்தான் வேட்பாளர்- டிரம்ப் பெருமிதம்

இந்த வெற்றி நமக்கு மிகப்பெரியது. குடியரசுக் கட்சியின் சார்பில் நான்தான் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவேன். என்னைப் பொருத்தவரை, வேட்பாளர் போட்டி என்பது முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன். ஹிலாரிக்கு சீனா, ஜப்பான், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளை வெற்றிகரமாக சமாளிக்கும் வலிமையும், திறனும் கிடையாது.

Leave a Reply