- உலகச்செய்திகள், செய்திகள்

அமெரிக்காவில் சீக்கிய தம்பதியர் மீது கொடூரத் தாக்குதல்

சான்பிரான்சிஸ்ேகா, ஏப்.7-
அமெரிக்காவில் மனைவியுடன் நடைப்பயிற்சி செய்த சீக்கியர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீக்கிய தம்பதியர் தாக்குதல்

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மகாணத்தில் பிரஸ்னோ சிட்டி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 70 வயதான சீக்கிய முதியவர் தனது மனைவியுடன் (69) நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர்களை 3 மர்மநபர்கள் இடைமறித்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் சீக்கியரின் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடித்தது. பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து மர்மநபர்கள் ஓடி ஒளிந்து மாயமாகி விட்டனர். மர்மநபர்களின் தாக்குதலில் சீக்கியர் பலத்த காயம் அடைந்தார். ரத்த வழிந்த நிலையில் தரையில் விழுந்து கிடந்த அவரை, அங்கு வந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை

மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:- சீக்கிய தம்பதியர் இருவரும் பிரஸ்னோ நகரின் வடமேற்கு பகுதியில் இரவு நடந்து சென்று உள்ளனர். அப்போது 3 நபர்கள் அவர்களின் எதிரே நடந்து வந்து உள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை தாக்கி உள்ளனர். வயதான தம்பதியர், தனியாக வந்ததை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் முயற்சியில் இது நடந்துள்ளது. மேலும் இன வெறி தாக்குதலாக தெரியவில்லை. இவ்வாறு போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் சமீபகாலமாக ஆங்காங்கே நடந்து வருகிறது.
இனவெறி தாக்குதல்

கடந்த செப்டம்பர் மாதம் பியாரா சிங் (82) என்ற சீக்கிய முதியவர் தாக்கப்பட்டார். மேலும் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி அம்ரிக் சிங் பால் (68) என்பவர் இன வெறி காரணமாக காரை ஏற்றி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். நீதிமன்றத்தில் அவர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.

———

Leave a Reply