- செய்திகள்

"அப்துல் கலாம் கனவுகளையும், லட்சியங்களையும் நிறைவேற்ற உறுதி ஏற்போம்" மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

.
சென்னை, ஜூலை.28-
அப்துல் கலாம் நினைவு நாளில்,அவரது கனவுகளையும், லட்சியங்களையும் தொய்வின்றி நிறைவேற்ற உறுதி ஏற்போம் என்று, மு.க.ஸ்டாலின் கூறினார்.
இது தொடர்பாக, தி.மு.க.பொருளாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறி இருப்பதாவது:-
லட்சியம், கனவு
இந்தியாவின் ஏவுகணை நாயகரும், இளைஞர்களின் கனவு நாயகருமாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. மறைந்த மாபெரும் தலைவரின் கனவுகளையும், லட்சியங்களையும் மனதில் நிலைநிறுத்தி நாட்டிற்காக பாடுபட வேண்டிய தருணத்தில் நாமெல்லாம் இருக்கிறோம்.
எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த டாக்டர் அப்துல் கலாம், 'இந்த நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் மட்டுமே இருக்கிறது' என்ற அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு சொந்தக்காரராக இருந்தார். மாணவர்களின் மனம் கவரும் பேராசிரியராகத் திகழ்ந்த அவர்,   "வித்தியாசமாக சிந்திக்கும் தைரியம், துணிச்சலாக புதிய கண்டுபிடிப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது, சவால்களை சந்தித்து வெற்றி பெறும் மன வலிமை" ஆகியவை இளைஞர்களின் பிரத்தியேகமான குணங்கள் என்று கருதியவர்.
மாணவர்கள் இதயத்தில்
இந்தியக் குடியரசு தலைவர், அணு விஞ்ஞானி, ஏவுகணை நாயகன் போன்ற பல்வேறு பட்டங்களும், பதவிகளும் அவரை தேடி வந்தாலும், அவர் மாணவர்களின் இதயத்தில்தான் கடைசி வரை குடியிருந்தார். இன்று அவர் மறைந்தும் குடியிருக்கிறார். இந்தியாவின் தலைசிறந்த மனிதராக திகழ்ந்த டாக்டர் அப்துல் கலாம் நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் ஒரு வருடம் கழித்து நேற்றுதான் தொடங்கியிருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது. என்றாலும், இனியாவது எந்தவித தாமதமும் இன்றி 'டாக்டர் அப்துல் கலாம் தேசிய நினைவகம்' கட்டும் பணிகளை முடுக்கி விட வேண்டும். எண்ணற்ற இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இன்றும் திகழும் டாக்டர் அப்துல் கலாமின் நினைவிடம் கட்டும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எம்.ஐ.டி.க்கு கலாம் பெயர்
அதேபோன்று, மேதகு அப்துல் கலாம் மறைந்த நேரத்தில், ராமேஸ்வரத்தில் இருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், "திரு.அப்துல் கலாம் அவர்களின்  நினைவாக சென்னை எம்.ஐ.டி.க்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்", என்று நான் கோரிக்கை வைத்திருந்தேன். அந்த கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த நேரத்தில் நான் நினைவுப்படுத்த கடமைப்பட்டு இருக்கிறேன்.
"கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது" என்ற உன்னதமான கோட்பாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மதிப்புக்குரிய அப்துல் கலாம், குடியரசு தலைவராக பதவி வகித்த காலங்களில் கூட கிராமங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள மக்களை சந்திப்பதில் அலாதி பிரியம் கொண்டு இருந்தார். அந்த மனித நேயமிக்க தலைவரின் நினைவு தினத்தில் அவரது கனவுகளையும், லட்சியங்களையும் தொய்வின்றி நிறைவேற்ற உறுதி எடுத்துக் கொள்வோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Leave a Reply