- செய்திகள், மாவட்டச்செய்திகள்

அந்நிய மூலதனம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? அரசுக்கு வைகோ கேள்வி

சென்னை, பிப்.17-
தமிழகத்துக்கு வந்துள்ள அந்நிய மூலதனம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என்று அரசுக்கு வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாநிலத்தின் மொத்தக் கடன் 2 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.01 சதவீதம் என்று மதிப்பீடு செய்வது ஏமாற்று வேலை. கடந்த தேர்தலின்போது  ஜெயலலிதா தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக நிதி அமைச்சர் கூறுவதில் துளியும் உண்மை இல்லை.
வெள்ளை அறிக்கை
விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும், 70 லட்சம் பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஜெயலலிதா அளித்த வாக்குறுதி செயல்படுத்தப்பட்டதா?
2013-ம் ஆண்டுக்குள் 5000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வரவே இல்லை. எண்ணூர், உடன்குடி போன்ற மின்உற்பத்தித் திட்டங்களுக்கு 5 ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டதுதான் இந்த அரசின் சாதனையா?
சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் மேம்பாலக் கட்டுமானத்தை நிறுத்தி, சென்னைத் துறைமுகத்தை முடக்கியதுதான் சாதனையா? உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தியதையே சாதனை என்கிற நிதி அமைச்சர், இதுவரை வந்துள்ள அந்நிய மூலதனம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Leave a Reply