- அரசியல் செய்திகள், மாநிலச்செய்திகள்

“அத்வானி, மன்மோகன்சிங்கை பேச்சுவார்த்தைக்கு அனுப்புங்கள்” விவசாயிகள் கோரிக்கை

அத்வானி, மன்மோகன்சிங்கை பேச்சுவார்த்தைக்கு அனுப்புங்கள் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கி வருகிறார்கள்.விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திரமோடி பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்தார். இதை விவசாய சங்கத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் எப்போது பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரியவில்லை.

இதற்கிடையே இது சம்பந்தமாக விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் கருத்துவெளியிட்டுள்ளார்.மத்திய அரசுடன் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் மத்திய அரசு அனுப்பி வைக்கும் மந்திரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதால் எங்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.

ஏனென்றால் மந்திரிகள் ஒருவித அழுத்தத்துக்கு மத்தியில் எங்களோடு பேசுகிறார்கள். அவர்களால் விரிவாக எதையும் சொல்ல முடிவது இல்லை. எனவே அவர்களோடு நாங்கள் பேசுவதற்கு விரும்பவில்லை.

எனவே பேச்சுவார்த்தைக்கு முக்கிய தலைவர்களை அனுப்பி வைக்க வேண்டும். அத்வானி, மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி போன்றவர்களை எங்களோடு பேசுவதற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதேபோல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அனுப்பி வைக்கலாம். அவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்.

தற்போது 3 சட்டங்களையும் 18 மாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக கூறி இருக்கிறார்கள். ஒரு வேளை 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற விருப்பம் இல்லை என்று சொன்னால் 2024-ம் ஆண்டுவரை சட்டத்தை நிறுத்தி வையுங்கள்.

நாங்கள் எவ்வளவு காலமானாலும் போராட்டத்தை கைவிடமாட்டோம். பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை போராட்டம் தொடரும்.

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுங்கள். அப்போதுதான் உரிய தீர்வுகளை காண முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே டெல்லியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பஞ்சாயத்து வாரியாக போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

இதன் முதல்கட்டமாக உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களில் பஞ்சாயத்து வாரியாக போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. அதன் பிறகு மற்ற மாநிலங்களில் இதேபோல போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

Leave a Reply