- மாவட்டச்செய்திகள்

அதிமுக கூட்டணியில் நீடிக்கவே விரும்புகிறேன் கருணாஸ் எம்எல்ஏ பேட்டி

அதிமுக கூட்டணியில் நீடிக்கவே, தான் விரும்புவதாக சட்டப் பேரவை உறுப்பினர் கருணாஸ் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவாடனை சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் முக்குலத்தோர் சமுதாயத்தினர் பரவலாக வசிப்பதால் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சசிகலா வருகையையொட்டி அதிமுகவில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதன் காரணம் என்னவென்று தெரியவில்லை.

என்னை பொருத்தவரை, அரசியல் ஆளுமை கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூலம் என்னை போன்ற சிறியவர்களும், எம்எல்ஏவாகும் வாய்ப்பை பெறமுடியும் என்ற நிலையை எனக்கு உருவாக்கி தந்தவர் சசிகலா தான் என்பதை என்னால் மறுக்க முடியாது.

சசிகலாவின் வருகை ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பாகவே உள்ளது. உண்மை என்றைக்கும் உறங்காது. நம்பிக்கை துரோகம் செய்தவர்களை மக்கள் மறக்கமாட்டார்கள். பணம் கொடுத்தால் வாக்கு வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள். அது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக இன்னும் பேசவில்லை. அதிமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்பதே என் விருப்பமாகும் என்றார்.

Leave a Reply