- செய்திகள்

அதிக தொகுதிகளை கைப்பற்ற இளங்கோவன் ‘பலே’ திட்டம்

 

‘‘பிடி கொடுத்து பேசலைன்னு சொல்றாங்க பா…’’ என்று பிரஸ் கிளப்பில் விவாதத்தை தொடங்கி வைத்தார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘நீவிர், யாரைப் பத்தி சொல்லுதீரு…?’’ என்று கேட்டார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.
‘‘தே.மு.தி.க. தங்களின் கூட்டணிக்கு வராததால, பா.ம.க. த.மா.கா. கட்சிகளின் பக்கம் தி.மு.க.வின் பார்வை திரும்பி இருக்குன்னு ஏற்கனவே பேசியிருந்தோம்ல… இதுதொடர்பா தி.மு.க. எம்.பி. ஒருத்தர், பா.ம.க.வின் மாநில நிர்வாகி ஒருத்தரிடம் சாதாரணமா பேச்சு கொடுத்தாராம் பா…
‘‘அன்புமணியை முதல்வர் வேட்பாளர்னு ஒரு வருஷத்துக்கு முன்னாலயே அறிவிச்சு, 100 தொகுதிகளுக்கு மேல பிரச்சாரம் செஞ்சுட்டோம்’னு பா.ம.க. மாநில நிர்வாகி மறைமுகமா மறுப்பு தெரிவிச்சுட்டாராம் பா…
‘‘மக்கள் நலக் கூட்டணி, தங்கள் நிலைப்பாட்டை மாத்திக்கிட்டு தே.மு.தி.க.விடம் சமரசம் செஞ்சுக்கிட்டதால, கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கு… அதைப் பார்த்திட்டுதான், பா.ம.க. தரப்புல பேசுறதுக்கே யோசிக்கிறாங்க’ன்னு அந்த எம்.பி., தி.மு.க. மேலிடத்துல சொல்லிட்டாராம் பா…’’ என்று தகவலை சுருக்கமாக முடித்தார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.

‘‘கடும் விமர்சனங்களால மேலிடம் அதிருப்தி ஆகிட்டாங்களாங்கோ…’’ என்று அடுத்து பேச ஆரம்பித்தார் நிருபர் ‘ஆல் இன் ஆல்’ அழகுமணி.
‘‘எந்தக் கட்சி மேலிடத்தை சொல்ற பா…?’’ என்று கேட்டார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘கடந்த 23-ந் தேதி மக்கள் நலக் கூட்டணியினர், தே.மு.தி.க.வோடு கூட்டணி சேர்ந்தாங்க… இந்த நிகழ்ச்சியில, ‘இந்த அணிக்கு பெயர், கேப்டன் விஜயகாந்த் அணி’ன்னு வைகோ திடீர்னு அறிவிச்சாருங்கோ…
‘‘இதனால, தனி மனித துதிபாடல், மீண்டும் சினிமா கலாச்சாரம்னு இடதுசாரி கட்சிகளுக்கு எதிரா கடுமையான விமர்சனங்கள் எழுந்துச்சு… இதுக்கிடையில, வைகோவின் 500 கோடி ரூபாய் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துச்சுங்கோ…
‘‘இந்த விவகாரங்கள்ல, தே.மு.தி.க. ம.தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள் ஒரு அணியாகவும், இடதுசாரி கட்சிகள் ஒரு அணியாகவும் முரண்படுற மாதிரி தோற்றம் உண்டாச்சு… இதனால இடதுசாரி கட்சிகளின் டெல்லி மேலிட தலைவர்கள் அதிருப்தி ஆகிட்டாங்களாம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நேத்து அவசரமா சென்னை வந்ததற்கு, இதுதான் காரணம்னு சொல்றாங்கோ…
‘‘அவரை சந்திச்ச பிறகு, ‘இந்த அணிக்கு பெயர், தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி’ன்னு ஜி.ராமகிருஷ்ணன் திட்டவட்டமா அறிவிச்சிட்டார்… அதேநேரம், ‘விஜயகாந்த் அணின்னு சொல்றது, கவுரவக் குறைச்சலா’ன்னு திருமாவளவன் கேள்வி எழுப்பி இருக்காருங்கோ…
‘‘அதோட, சீத்தாராம் யெச்சூரியை, அவரோட அழைப்பின்பேரில், வைகோ மட்டும்தான் சந்திச்சு பேசினார்…. திருமாவளவன், விஜயகாந்த் அல்லது அவங்க சார்பா யாரும் யெச்சூரியை சந்திச்சுப் பேசாதது, கூட்டணியில முரண்பாடு தொடருதான்னு சந்தேகத்தை கிளப்பி இருக்குங்கோ…’’ என்று கூறி முடித்தார் நிருபர் அழகுமணி.

‘‘ஆதரவாளர்களுக்காக பாதி தொகுதிகளை கைப்பற்றும் முடிவுல இருக்காராம்…’’ என்று அடுத்து பேச ஆரம்பித்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.
‘‘யாரைப் பத்தி சொல்றீங்கோ சார்…?’’ என்று கேட்டார் நிருபர் அழகுமணி.
‘‘தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு ஓரிரு நாள்ல முடிவடையும்’னு தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சொல்லி இருக்கார்… காங்கிரஸ் தரப்புல 50 தொகுதிகள் கேட்கிறாங்களாம்… தி.மு.க. தரப்போ, ‘வாசன் வந்தார்னா அவருக்கு 20, காங்கிரஸுக்கு 30 தொகுதிகள் தரலாம்’னு திட்டமிட்டிருக்காங்களாம்…
‘‘தி.மு.க. எத்தனை தொகுதிகளை கொடுத்தாலும், அதுல பாதி தொகுதிகளை தனது ஆதரவாளர்களுக்காக கைப்பற்ற இளங்கோவன் திட்டமிட்டிருக்காராம்… கடந்த கால தேர்தல்கள்ல, கூட்டணி கட்சியிடமிருந்து கிடைக்கிற தொகுதிகள்ல பாதி தொகுதிகளை, அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் தரப்பு எடுத்துக்கிடுச்சாம்…
‘‘2011-ல் வாசன் ஆதரவாளர் ஞானதேசிகன் தலைவரா இருந்தபோது, தி.மு.க. கொடுத்த 63 தொகுதிகள்ல 35 தொகுதிகள்ல வாசன் தரப்புதான் போட்டி இட்டதாம்… இந்த மாதிரி ஆளுக்கொரு ‘பார்முலா’வோட, மற்ற கோஷ்டி தலைவர்களும் தொகுதிகளை கைப்பற்ற தயாரா இருக்காங்க வே…
‘‘இந்த நிலைமையில, கூட்டணியில இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில, தி.மு.க.விடமிருந்து கூடுதல் தொகுதிகளை வாங்குறதுல காங்கிரஸ் கட்சி மேலிடம் உறுதியா இருக்காம்… அதனால மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் மீண்டும் சென்னைக்கு வருவார்னு சொல்றாங்க வே…’’ என்று கூறி பிரஸ் கிளப்பில் விவாதத்தை நிறைவு செய்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.*

Leave a Reply