- செய்திகள்

அடையாறு ஆற்றில் வீடுகளை பாதுகாக்க வெள்ள தடுப்பு அமைக்கவேண்டும் தலைமைச் செயலாளரிடம் மா.சுப்பிரமணியன் மனு…

சென்னை, ஜூலை.11-
மழை காலங்களில், அடையாறு ஆற்றில் வீடுகளை பாதுகாப்பதற்கு வசதியாக, வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன் வெள்ள தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று, தலைமைச் செயலாளரிடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்தார்.
கோரிக்கை மனு
சென்னை, சைதாப்பேட்டை தொகுதி `எம்.எல்.ஏ.' மா.சுப்பிரமணியன் தலைமை செயலாளர் மற்றும் பொது பணித்துறை செயலாளரை சந்தித்து தொகுதி பிரச்சினை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மழை வெள்ள பாதிப்பு
சென்னை நகரில், எப்போதெல்லாம் மழை வருகிறதோ, அப்போதெல்லாம் மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து என்னுடைய சைதாப்பேட்டை தொகுதி தவறுவதில்லை. சைதாப்பேட்டையில், அடையாற்றின் இரு மருங்கிலும் உள்ள குடியிருப்புகள், குறிப்பாக குடிசைப் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
லட்சக்கணக்கான மக்கள் அவதி
முத்துரங்கம் பிளாக், ஜோதிராமலிங்கம் நகர், சாரதி நகர், துரைசாமி தோட்டம், நாராயணசாமி தெரு, நாகிரெட்டித் தோட்டம், ஆலாட்சியம்மன் குடியிருப்பு, அருளாயம்மன்பேட்டை, விநாயகபுரம், பார்சன் குடியிருப்பு, சென்ட்ரல் எக்ஸசைஸ் காலனி, கஸ்டம்ஸ் காலனி, செட்டித் தோட்டம், ஜோதியம்மாள் நகர், நெருப்புமேடு, ஜோதி தோட்டம், அபித்காலனி, சாமியார் தோட்டம், கோதாமேடு, அண்ணாநகர், சலவையாளர் காலனி, சலவைத் துறை, திடீர்நகர், மேக்ஸ் லேண்ட், கலைஞர் தெரு, சின்னமலை குடியிருப்புப் பகுதிகள், ஆரோக்கிய மாதா நகர், ஜோதியம்மாள் நகர், வரதராஜபுரம், சூர்யா நகர், சித்ராநகர், கோட்டூர்புரம் போன்ற பல்வேறு பகுதிகளிலுள்ள லட்சக்கணக்கான மக்கள் மிகப்பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
ஆகாயத்தமரை, கருவேல மரங்கள்
மழை வெள்ள நீர் விரைந்து செல்லுவதற்கு ஏதுவாக ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் கருவேல மரங்களை அகற்றியும், ஆற்றை ஆழப்படுத்தியும், குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை வெள்ளநீர் புகாமல் தடுக்க, இருபுறமும் மழை வெள்ள தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். இது சைதாப்பேட்டை தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
வெள்ளத்தடுப்புச்சுவர்
எனவே, வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே, பொது பணித்துறை இதற்கான நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டு ஆற்றை ஆழப்படுத்தியும் ‘வெள்ள தடுப்புச் சுவர்’ கட்டியும் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply