- செய்திகள்

அடுத்தகட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு தயாராகிறது கொரோனா தடுப்பூசி ஒத்திகை முடிந்தது

4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகிறது.

ஆந்திரா, குஜராத், பஞ்சாப், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த ஒத்திகை வெற்றி அடைந்துள்ளது.

இதையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒத்திகையில் பங்கேற்க இருப்போரின் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டன. அவர்களுக்கு செல்போன் மூலம் தடுப்பூசி செலுத்தும் நேரம், இடம் தொடர்பான விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டன.

அந்தந்த மையங்களுக்கு அவர்கள் வரவழைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் ஒத்திகைகள் நடைபெற்றன. அந்த மையங்களிலேயே குறிப்பிட்ட 30 நிமிட நேரத்துக்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களது தகவல்கள் ‘கோ-வின்’ என்ற மத்திய அரசின் புதிய வலை தளத்தில் சேமித்து வைக்கப்பட்டன. அவர்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைப்பது தொடர்பாகவும் ஒத்திகை நடத்தப்பட்டது.

தடுப்பூசியை குறிப்பிட்ட குளிர்பதன நிலையில் சேமிப்பது, தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு அதை கொண்டு வந்து வினியோகிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசி ஒத்திகை தொடர்பாக 4 மாநிலங்களும் திருப்தி தெரிவித்தன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதற்காக பதிவு செய்துகொள்ள ‘கோ-வின்’ என்ற செயலி தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதில் இதுவரை 1.5 லட்சம் சுகாதார பணியாளர்களின் பெயர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து பொது மக்களுக்கு தடுப்பூசி விரைவில் போடப்பட உள்ளது. தடுப்பூசி போடு வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. தடுப்பூசி போடுவதற்கான முறையான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதில் சுமார் 1 கோடி சுகாதார பணியாளர்கள், சுமார் 2 கோடி முன்கள பணியாளர்கள், வயது அடிப்படையில் 27 கோடி பொதுமக்கள் ஆகியோர் அடங்குவர்.

Leave a Reply