விமானத்தில் பயணம் செய்யும் போது டிக்கெட், போர்ட்டிங் பாஸ் இல்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.நாடு முழுவதும் அரசு அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும் காகிதம் இல்லா செயல்பாட்டு திட்டத்தினை மத்திய அரசு படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.அந்த அடிப்படையில் ரெயில் பயணத்தில் காகித பயன்பாட்டை குறைத்து ஆன்லைன் வழியாக செல்போன் தகவல் தொழில் நுட்பம் மூலம் பயணம் செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.
அதேபோல விமான பயணத்திலும் காகித பயன்பாட்டை குறைக்கும் தொழில் நுட்பத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.‘போர்டிங் பாஸ்’, டிக்கெட் அல்லது காகிதம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது. ‘டிஜிட்டல் யாத்ரா’ என்னும் காகிதம் இல்லா பயோமெட்ரிக் தொழில் நுட்பம் பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்களில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பரிட்சார்ந்த முறையில் டெல்லி விமான நிலையத்திலும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தை சென்னை விமான நிலையத்திலும் விரைவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் போது டிக்கெட், போர்ட்டிங் பாஸ் போன்றவற்றை காகிதம் இல்லாமல் செயல்படுத்தும் இந்த நவீன தொழில் நுட்பம் 2021ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.விஜயவாடா, வாரணாசி, கொல்கத்தா மற்றும் புனே ஆகிய விமான நிலையங்களில் செயல்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குனர் ஸ்ரீகுமார் கூறும்போது, விஜயவாடா விமான நிலையத்தில் நவீன தொழில் நுட்ப திட்டத்தை பரிட்சார்ந்த முறையில் செயல்படுத்தி அதில் உள்ள குறை நிறைகளை களைந்து சென்னை விமான நிலையத்தில் 2021–ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பின்பற்றி விமான நிலையத்தில் பயணிகள் அனைத்து செயல்பாட்டையும் நிறைவேற்றுவதுதான் இத்திட்டம்.விமானத்தில் நுழையும் பயணிகள் ஆட்டோமேட்டிக் ஸ்கேனிங் தொழில் நுட்பம் மூலம் முகத்தை பதிவு செய்துகொள்ளும். நுழைவு பகுதி, பரிசோதனை பகுதி, போர்டிங் பகுதி உள்ளிட்ட அனைத்து சோதனை பகுதிகளிலும் பயணிகள் முகம் ஸ்கேன் செய்யப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு முதலில் ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கப்படும்.
பயணியை பற்றிய விவரங்கள் ஆதார், பான்கார்டு மற்றும் டிரைவிங் லைசென்சு மூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்படும். பயணிகள் ஒரு முறை முகத்தை ஸ்கேன் மூலம் பதிவு செய்து கொண்டால் போதுமானது.விமான நிலையத்தில் புறப்பாடு பகுதி நுழை வாசலில் முகம் ஸ்கேனிங் செய்யப்படும்.
பதிவு செய்யப்பட்ட முழுமையான தகவல்களின் அடிப்படையில் போர்ட்டிங் பாஸ் இல்லாமல் பயணம் செய்ய முடியும். அதன்பின்னர் பயணிகள் தங்களது உடமைகளை ஒப்படைத்து விடலாம்.எளிதான முறையில் எவ்வித சிரமமுமின்றி இந்த சோதனை நடைபெறும் இதனால் பயணிகள் நீண்ட நேரம் போர்ட்டிங் பாசுக்காக காத்திருக்க தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.