BREAKING NEWS

காய்கறிகள் விலை உயர்வுக்கு காரணம் என்ன..?

வரலாறு காணாத வகையில் தற்பொழுது காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.  குறிப்பாக அன்றாடம் உணவுக்காக அனைவரும் அத்தியாவசியமாகப் பயன்படுத்தும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வினால் சாமானியர்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.  எல்லாவித சமையலுக்கும் பயன்படுத்தும் வெங்காயம் இன்று ஒரு கிலோ 100 ரூபாயைத் தாண்டிய உச்சத்தில் உள்ளது.  அதேபோல தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயைத் தொடும் அளவில் இன்று விலை உயர்ந்து வருகிறது.

ஒரு வாழைக்காய் 2 ரூபாயிலிருந்து 6 ரூபாய்க்கும் முருங்கைக்காய் ஒரு கிலோ 50-100-150 என்று விலையேறி இன்று 250 ரூபாயை எட்டியுள்ளது. அதேபோல எலுமிச்சை 30 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும் இஞ்சி கிலோ 80 ல் இருந்து 160 ரூபாய் என எல்லா வகையான காய்கறிகளும் உயர்ந்து வருகிறது.  கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு முன்பு இருந்த காய்கறியின் விலை தற்போது நான்கு மடங்காக உயர்ந்துள்ளது.  காய்கறிகளின் விளைச்சல் குறைவு என்பது மட்டும் இந்த விலை உயர்வுக்குக் காரணமாக இருக்க முடியாது.  ஏனெனில் விளைச்சல் குறைவு என்றால் என்னதான் விலை கொடுத்தாலும் வாங்குவதற்கு பொருட்கள் கிடைக்காது.  தட்டுப்பாடுகள் ஏற்படும்.  ஆனால், இன்றைய சூழல் அப்படிப்பட்டதல்ல.  வெங்காயத்திற்கும், தக்காளிக்கும் இன்ன பிற காய்கறிகளுக்கும் விலை அதிகம் கொடுத்தால், எத்தனை ஆயிரம் கிலோ காய்கறிகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.  எந்த விதக் கட்டுப்பாடும் இல்லை. பொதுவாக ஓரளவு காய்கறி விலையேற்றம் என்பது பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏற்படும்.  காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை சுமந்து செல்லும் வாகனங்களுக்குத் தேவைப்படும் எரிபொருள் பெட்ரோல் டீசல் தேவை என்பதால், இந்த எரிபொருள் விலைகள் உயரும் போதெல்லாம் அத்தியாவசியப் பண்டங்களின் விலையும் உயரும்.  தற்போதைய சூழலில் பெட்ரோல் டீசல் விலையானது தொடர்ந்து ஏறுமுகமாகத்தான் உள்ளது என்பதையும் மறுக்க முடியாததுதான்.  ஆனாலும் காய்கறிகளின் இந்த திடீர் பன்மடங்கு விலை உயர்வுக்குக் காரணமே, பதுக்கி வைத்து வியாபாரம் செய்யும் இடைத்தரகர்களின் செயல்பாடுகளும் ஒரு காரணமாக இருக்கிறது.

இந்தப் பதுக்கல் பேர்வழிகளையும், அவர்களுடன் கைகோத்து செயல்படும் இடைத்தரகர்களை அடையாளம் கண்டு, அரசாங்கங்கள் உரிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.  சமீபத்தில் டெல்லியில் வெங்காய விலை மிக அதிகமான முறையில் உயர்ந்து வந்தது.  தேவைப்பட்டால் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நேரடியாக விற்பனை செய்யும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பினால் ஓரளவு வெங்காய விலை சரிந்தது. ஏனெனில் இந்த நடவடிக்கையால் பதுக்கல் வெளிப்பட்டது என்பதே உண்மையாகும்.

மேலும், இந்த காய்கறி உயர்வினால் அன்றாடம் ஆட்டோ ஓட்டிப் பிழைப்பவர்கள், கட்டுமானப் பணிகளில் உள்ளவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் என எந்தவித கூலி உயர்வும் இல்லாத இந்த மக்கள்தான் வெகுவாகப் பாதிப்படைகின்றனர்.  கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. “உழுதவன் கணக்குப் பார்த்தால் உலக்கை கூட மிஞ்சாது” என்பது போல, இந்த காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் குன்றி வருவதும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.  விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் அல்லாடுகின்ற பரிதாபச் சூழ்நிலை, இடைத்தரகர்களால் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது.  உண்மையிலேயே நேர்மையான வணிகம் எனில், விலை உயர்வின் லாபம் விவசாயிக்கு வந்து சேரவேண்டும்.  ஆனால், அந்தப் பலன் உழைக்காத வர்க்கமான தரகர்களுக்குச் செல்கிறது.  தமிழக அரசு இந்த மோசமான வணிகத்தை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்க வேண்டும்.  தமிழகம் முழுவதிலும் ஒவ்வொரு நகரத்திலும், விவசாயிகளிடம் நேரடியாக அன்றாடம் காய்கறிகளை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் நடைமுறையைக் கொண்டுவர வேண்டும்.  எத்தனையோ நல்ல விசயங்களுக்கு உதாரணமாக இருக்கின்ற தமிழகம், இந்தப் புதிய திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்ட முடியும் என்பது மட்டுமல்ல, இதில் விவசாயிகளும் பொதுமக்களும் நலன் பெறுவார்கள் என்பதுதான் முக்கியமானது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *