BREAKING NEWS

பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக்குரல்..!

அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும் வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட மேலாளர் ரஜித் ராய்க்கும் பிறந்தார். தனது சிறுவயதில் கேரளாவில் உள்ள ஆய்மணம் (Aymanam) என்ற சிற்றூரில் வளர்ந்தார். கோட்டயத்திலும் நீலகிரியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் தில்லிப் பல்கலைக்கழகத்தில் கட்டக்கலை படிப்பில் சேர்ந்தார். அங்கு தனது முதல் கணவரைச் சந்தித்தார். பின் தங்கள் படிப்பை விடுத்து இருவரும் வெளியேறினர். தன் முதல் கணவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் அவர் பிரதீப் கிரிஷன் என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து சில படங்களை எடுத்தனர். இப்படங்களுக்கு அருந்ததி திரைக்கதை எழுதியது குறிப்படத்தக்கது. அவற்றில் சில In Which Annie Gives It Those Ones and Electric Moon.

 

அருந்ததி ராய் தனது பள்ளி பருவத்திலிருந்தே தானாகச் சிந்திப்பவர். இதற்கு அவர் படித்த பள்ளியின் கட்டற்ற படிப்புமுறை காரணமாகத் திகழ்ந்தது. இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன்  என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். இவ்வாறே இவரது குரல் சமுதாயத்தின் மறுபக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்தக் குரல் பல முறை எழுத்து வடிவமாக இருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது. நர்மதை போராட்டம், காஷ்மீர் பிரச்சனை, பாபர் மசூதி இடிப்பு, வகுப்புவாத சக்திகள், பொருளாதார நடவடிக்ககைள், சிறுபான்மையினர், தலித் குறித்து மாறுபட்ட யதார்த்தக் கண்ணோட்ட தளத்தில் எழுதியிருக்கிறார். தன் எழுத்து மக்களைச் சென்றடைவதை உணர்ந்த அருந்ததி ராய் நாவல்கள், அரசியல் கட்டுரைகள், விமர்சனங்கள் என பல விதமான படைப்புகளை படைத்து வருகிறார்.

இவரது படைப்புகளின் தன்மை பல நேரம் எதனையும் கறுப்பு வெள்ளையென்று பிரித்து அடையாளம் காட்டாது. மனிதர்கள், நாடுகள், கொள்கைகள் என்று அனைத்திலும் உள்ள தீமை மற்றும் நன்மையை உணர்ச்சி நிலையிலிருந்து விலகி படைப்பதால் இவரது படைப்புகள் உலகில் பல பத்திரிகைகளில் இடம் பெற்றுவருகின்றன. 1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. 2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார். மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசை பெற்றார். தன்னை ஒரு பெண் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிடாமல் பரந்துப்பட்ட தளங்களில் இயங்கி வந்திருக்கிறார். இந்திய பண்பாட்டு சூழலில் பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய நடைமுறை முரண்கள் குறித்தான ஆழமான விமர்சன பார்வையையும் அதற்கான தீர்வு முறைகளையும்  கொண்டிருக்கக்கூடிய ஆளுமைதான் அருந்ததிராய்.

“படுகொலைகள், மோதல் கொலைகள், வன்முறைக் கும்பலைக் கொண்டு அடித்துக் கொலை செய்வது, சிறையில் அடைப்பது இவைகள் மட்டும்தான் தாக்குதல் வடிவங்கள் அல்ல. நாட்டின் ஒவ்வொரு நிறுவனமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. நீதிமன்றங்கள் தாக்கப்படுகின்றன, மருத்துவமனைகளைக்கூட  அவர்கள் விட்டுவைக்கவில்லை. பொருளாதாரத்தில் என்ன நடந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். பணமதிப்பு நீக்கம், சரக்கு  சேவை வரி என்பனவற்றின் தாக்குதல்கள், வங்கிகள் மீதான தலையீடு, ஆயுதப்படைகள், உளவுப்படைகள், ஊடகங்கள், உழவர்கள்,  நாட்டின் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு பிரிவு மக்களும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள்  பல்கலைக்கழகங்களையும் கல்வித்துறைகளையும்கூட விட்டுவைக் கவில்லை. அவர்கள் அறிவாளிகளைக் கண்டு மட்டும் அஞ்சவில்லை, அறிவைக் கண்டும் அச்சப்படுகிறார்கள். ஆகவேதான், அறிவாளிகளைத் தாக்குவதோடு, அறிவையும் தாக்க முற்பட்டிருக்கிறார்கள்.” என்று சமீபத்தில் அருந்ததி ராய் வெளியிட்ட கருத்து, தற்போதைய இந்திய தன்மையின் குறுக்கு வெட்டு தோற்றத்தினை புரிந்துகொள்வதற்கான வார்த்தைகளாகும்.

பழங்குடியின மக்களை காடுகளிலிருந்து பிரித்தெடுக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த காலகட்டத்தில் அதனை எதிர்த்து அருந்ததி ராய் அடுக்கடுக்கான பதில் வராத பல கேள்விளை முன்வைத்திருந்தார். தற்போதைய இந்தியாவை சரியான திசை போக்கில் கொண்டுச் செல்ல அருந்ததி ராய் மாதிரியான ஆளுமைகளை இந்தியா இன்னும் அதிகமாய் அடையாளம் காணவேண்டியுள்ளது.

இன்று அருந்ததி ராய் பிறந்த தினம்.

-கார்த்தி.ரா
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *