BREAKING NEWS

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் ~ 10 எம்.ஜி.ஆரிடம் என்னை அறிமுகம் செய்தவர் சுரதா..!

அது மதுரை தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலம். வகுப்பில் பாடம் நடத்தியபோது, மாணவர்களிடம் சில தொடர்களைத் தொடர்ந்து சொல்லியிருக்கிறேன். இதனை மனனம் செய்தால், தமிழ் நடை வளரும் என்று சில பகுதிகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அந்தக் காலத்தில், பள்ளிகளில் ஒப்புவித்தல் போட்டி என்று நடக்கும். வீர உரைகளை எழுதித் தந்து, அதனை ஒப்புவிக்கச் செய்வார்கள்.

“போர்க்குறிக் காயமே, புகழின் காயம். யார்க்கு அது வாய்க்கும்?” என்று மனோன்மணீயம்

சுந்தரனாரின் நூலில் வருகிற பகுதியை, மாணவனாக இருந்தபோது, ஒப்புவித்தல் போட்டிக்காக மனனம் செய்திருக்கிறேன். அதன்பிறகு, உயர்நிலைப் பள்ளியில் பேசியிருக்கிறேன்.

 

“பேரன்பு கொண்டோரே!” பெரியோரே! என்னைப் பெற்ற தாய்மாரே!” என்ற புரட்சிக்கவிஞரின் பாடலில் ஏழெட்டு விருத்தங்களைச் சொல்லியிருக்கிறேன். நான் ஆசிரியராகப் பாடம் நடத்தியபோது, “அறிவு எப்படி வீழ்கிறது?” என்று நக்கீரர் சொல்லிய திருமுருகாற்றுப்படையில் இருந்து நாற்பது வரிகளைச் சொல்லியிருக்கிறேன். அதை மனனம் செய்து, மூன்று நாட்கள் கழித்து, அறிவு எப்படி வீழ்கிறது என்று சொல்லத் தொடங்கினேன். அப்போது கல்லூரி மாணவராக என்னிடம் பயின்ற திரு. காளிமுத்து, “நான் சொல்கிறேன்” என்று திருமுருகாற்றுப் படையில் இருந்து வரிகளை மனப்பாடமாகச் சொன்னார். நான் அப்படியே சிலிர்த்துப் போனேன்.

 

கல்லூரியில் பயின்ற போது, எனக்குச் சுரதாவின் பாடல்களில் பெரிய மயக்கம் இருந்தது. அவருடைய பாடல்வரிகள் பலவற்றை, நான் தொடர்ந்து சொல்வேன். அந்தக் கவிதைகள், காளிமுத்துவுக்கு நன்றாகத் தெரியும். அவர் அதுபோல, பல கதைகள், கவிதைகளைச் சொல்வார். என்னை முதன்முதலாக உவமைக் கவிஞர் சுரதாதான் புரட்சித்தலைவரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார். அந்த உவமைக் கவிஞரின் இப்பாடலைத்தான் நான் வாய்நிறையச் சொல்வேன். அதை முழுவதும் அப்படியே திருப்பிச் சொல்பவர்தான் என் மாணவர் காளிமுத்து…

 

அந்த கவிதை…

‘மூச்சு ஊஞ்சல்’

===============

வெண்ணிலவில் நீ உரைத்த வார்த்தை தன்னை

விளையாட்டுப் பேச்சென்று நினைத்திருந்தேன்.

உண்மையிலே அவ்வாறு இருக்கு மானால்,

உயிர்மலரே! எனைப்பார்க்கத் தவறு வாயா?

பெண்ஒருத்திக், காதலனை வருத்த வேண்டின்,

பிணங்கிடலாம்; அதைவிட்டு, நீயோ என்றன்,

கண்ணுக்கு உன்அழகைக் காட்டி டாமல்,

கண்விளக்கில் உப்புநீரை ஊற்று கின்றாய்!

முதன்முதலில் தாய்ப்பாலின் இனிமை கண்டேன்;

முழுநிலவே! அதனால்நான் வளர்ச்சி பெற்றேன்

அதற்குப்பின் செந்தமிழின் இனிமை கண்டேன்.

அதனாலே தமிழ்நாட்டின் கவிஞன் ஆனேன்!

புது அழகே! மூன்றாவ தாக உன்றன்

பூஉதட்டில் சுவை கண்டேன், பித்தன் ஆனேன்.

இதுவரைக்கும் ‘நெல்இரவு’ ஆக்கி வந்தாய்;

இப்போதோ, ‘பதர்இரவு’ ஆக்குகின்றாய்.

நெருப்புதனை நன்றாக உற்றுப் பார்த்தால்;

நீலநிறம், செம்மைநிறம் தெரியும்; அந்த

இருநிறத்தில், நீலத்தை “சக்தி” என்பர்;

இன்னொன்றைச் “சிவம்” என்று சொல்வர்; சோழ

அரசாங்க ஓவியமே! நீயும் நானும்,

அவ்விரண்டு நிறம்போன்று இருந்தோம்; ஆனால்

நெருஞ்சிப்பூ சிலநாட்கள் கழித்து, முட்கள்

நீட்டுவதற் கொப்பாக நடக்கின் றாய்நீ.

கோடையிலே, பொதியமலைச் சந்த னம்போல்

குளிர்ச்சி தந்தாய்; குயிலோசை தந்தாய்; ஈர

வாடைதரும் பனிப்பருவ காலந் தன்னில்,

வாய்குவிந்த தாமரையின் உட்பு றம்போல்,

சூடுதந்தாய்; நீஎனக்கு உன்னைத் தந்தாய்!

ஆடுகின்ற காவேரி மயிலே! என்னை

அடியோடு மறந்தாயா? வெறுத்திட் டாயா?

நிலத்தைவிடப் பெரிதென்றும்; நிலவின் வட்டம்

நீந்துகின்ற வானைவிட உயர்ந்த தென்றும்;

அலைவீசும் கடலைவிட, நமது நட்பு

ஆழத்தை காட்டுமென்னும் நினைத்தி ருந்தேன்

தலைகீழாய்த் திருப்பிவிட்டாய், நமது காதல்

சந்திப்புச் சம்பவத்தை; இல்லா விட்டால்,

மலைக்குப்பின் இருக்கின்ற சிற்றூர் போல

மறைவாக இருப்பாயா எனைப்பா ராமல்?

நீரருவிக் கரைதனிலே, அன்று என்னை

நிற்கவைத்து, நீஎதிரே நின்று; பார்வை

ஓரத்தால் பேசியதும், என்னி டத்தில்

உறுதிமொழி கூறியதும், ஒவ்வோர் நாளும்,

ஆருயிரே! ஆணழகே! அன்பே! என்று,

அழைத்ததுவும் பொய்தானா? போலி தானா?

கூரம்மா, கொலைவாளா நீதான்! இல்லை

குளிர்மழையா? எதுஎன்றே தெரிய வில்லை.

ஒவ்வோர்நாள் இரவினிலும் சோலை வந்து

உனக்காகக் காத்திருந்தும் வந்தாய் இல்லை.

இவ்வாறு செய்வதுஏன்? உனக்கு, வேம்பின்

இலையாகி விட்டேனோ? நிலவைத் தேடும்

செவ்வல்லி போன்றவளே, உனைப்பா ராமல்

செத்துக்கொண்டி ருக்கின்றேன், நெருப்பு வீட்டில்

சவ்வாதே! சந்தனமே! இனிமேல் உன்றன்

சந்திப்பே இல்லைஎனில், சாவே இன்பம்!

நான்செத்தால், என்னோடு இளமை சாகும்;

நான்கண்ட கனவுகளோ, கண்ணில் சாகும்;

தேன்சொற்கள், நாக்கினிலே சாகும்; வாழ்வில்

சேகரித்த ஆசையெலாம் நெஞ்சில் சாகும்;

மீன்விளக்கே! கருவண்டு மிதிக்கும் பூவே

மென்கொடியே! இருந்தாற்போ லேயிருந்து,

ஏன்செத்தான் கம்பன்மகன் என்று கேட்டால்,

என்சொல்லும் இதற்குவிடை உனது உள்ளம்?

என்னாலே உனைமறக்க முடிய வில்லை,

ஏனென்றால், என்உளத்தில் பதிந்து விட்டாய்.

மன்னவனின் மகள்நீயோ, வெடுக்கென் றென்னை

மறந்துவிட்டாய், எனைத்தூக்கி எறிந்து விட்டாய்;

மன்னவர்கள் தீம்போன்றோர்; மேலும் அன்னோர்,

வாளேந்திக் கொலைசெய்யும் கிரீடக் கூட்டம்,

அன்பென்றால், புலிக்கென்ன தெரியும்? என்னை,

அரசன்மகள் நீ மறந்தால் வியப்பே இல்லை!

அனல்மீது நிற்கின்றேன்; கண்ணே பெண்ணே

அணுஅணுவாய்ச் சாகின்றேன்; பார்வை நீரால்

நனைகின்றேன்; நலிகின்றேன்; நிலவு போல,

நாள்தோறும் இளைக்கின்றேன்; உமைசந் திக்க

இனிமேல்நான் வரமாட்டேன், வரவே மாட்டேன்

என்றேனும் சொல்லிவிடு; சொல்லி விட்டால்,

இனிஎதற்கு உடலுக்கு ‘மூச்சு ஊஞ்சல்’

இப்போதே பிணமாவேன், சாம்ப லாவேன்!

 

 

இவ்வாறு சுரதாவின் கவிதையை மொழிவதைப் போன்றே, “வாழ்க்கை இல்லறத்தில் தொடங்குகிறது. வாழ்க்கைத் துணைநலத்தோடு இணைகிறது. மக்கட்பேறில் நிறைகிறது” என்று சொல்லி, புகழ் வரையிலும் திருக்குறள் அதிகாரங்களையும் ஒருங்கே தொகுத்துச் சொல்லுவேன்.

 

எம்.ஜி.ஆர் வியந்த காளிமுத்து…

 

அதன்பிறகு, என் பேச்சுநடை, வேறு பல மாற்றங்களைப் பெற்றது. காளிமுத்துவும், இதேபோலத் தொடர்நடைகளைச் சொல்வதைக் கேட்டு, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெரிய வியப்படைந்தார். எந்தநேரத்தில் சென்றாலும், காளிமுத்துவை அந்தத் தொடர்களைச் சொல்லச் சொல்லிக் கேட்பார். காளிமுத்து எங்கே போனாலும், “இது எங்கள் ஆசிரியர் ஒளவை இட்ட பிச்சை” என்று பேசுவார். அது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அவர் அமைச்சராக வந்தபோது, நான் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருந்தேன். அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றதும், தலைமைச் செயலகத்தில் இருந்த என்னைப் பார்ப்பதற்காக, நேராக என் அலுவலக அறைக்கு வந்தார். அதற்குமுன்பு, சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது, அவர் வந்திருந்தார். அவர் வருகிறார் என்று தெரிந்ததும், நான் என் அலுவலக அறையில் இருந்து, வெளியே வந்தேன். வரவேற்றேன். அமைச்சராக ஆனபோதும் எப்போதும்போல மாறாத அன்புடையவராக, பரிவுடையவரா இருந்தவர் காளிமுத்து.

 

தலைமைச் செயலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் பேசினார். “முன்பெல்லாம், ஆசிரியர்களை ஏணி என்றும், தோணி என்றும் சொல்வார்கள். ஏணி, பிறரை ஏற்றுவிக்கும். ஆனால், இருந்த இடத்திலேயே நிற்கும். தோணி, ஆற்றைக் கடக்க உதவும் ஆனால், ஆற்றிலேயேதான் கிடக்கும் என்றுதான் ஆசிரியரைச் சொல்வார்கள். ஆனால் பாருங்கள், எனக்கு வாய்த்த ஆசிரியர் அப்படியல்ல. அவர் ஏணிதான்! சாதாரண ஏணி அல்ல. மின்சார ஏணி. நான் மின்சார ஏணி என்று லிப்டைச் சொல்கிறேன். ஏனென்றால், லிப்டில் நாம் போய் நின்றால், நம்மோடு அனைவரும் வருவார்கள். நான்தான் தலைமைச் செயலகத்திற்கு வந்திருக்கிறேன் என்று பார்த்தால், எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரும் இங்கு வந்திருக்கிறார். ஆசிரியர் என்றால், இப்படியிருக்க வேண்டும்” என்று என்னைப் பற்றிப் புகழ்ந்து சொன்னார். என்னைப் புகழ்ந்து சொன்னார் என்பதற்காக, இதை நான் சொல்லவில்லை. ஏணி என்பதை லிப்ட் என்று மாற்றினாரே, அது அவரது பெரிய கலைத்திறமை. பிறகு, மேடைகளில் பேசி, எல்லோருடைய மனத்தையும் கவர்ந்ததை, நாடு அறியும்.

 

எனக்கு நெகிழ்ச்சியைத் தருகிற, மற்றொரு செய்தி. அவர் கட்சிகள் மாறினார். தலைவர்களை மாற்றிக் கொண்டார். ஆனால், அவர் எந்தக் கட்சியில் இருந்த போதும், என்னைப் பார்த்து, அன்போடு பேசிவிட்டுப் போவார். திடீரென்று ஒருநாள், அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி வந்தது. அவர் மறைவதற்குச் சிலநாள் முன்பாக, மருத்துவ நிலையத்தில் இருக்கிறார் என்றபோது, நான் பார்த்துவிட்டு வந்தேன். அப்போதுகூட, எழுந்து நின்று, வணக்கம் செய்து, தொல்லைப்பட்டது உருக்கமாக இருந்தது.

அண்ணா நகரில், என் வீட்டுக்குப் பின் தெருவில், அவரது வீடு இருந்தது. நான் மனம் பதறிப்போய், அவரது உடலைப் பார்க்கப் போனேன். பெரிய கூட்டம் இருந்தது.

காளிமுத்துவின் பிள்ளைகளில் ஒருவர் வெளியே ஓடிவந்து, “ஐயா! வாருங்கள் உங்கள் மாணவனைப் பார்க்க வாருங்கள்’ என்று கலங்கி, ஓலமிட்டபடி என்னை அழைத்துப் போனார்.

 

நான் உள்ளே போனவுடன், காளிமுத்துவின் துணைவியார் என்னைப் பார்த்துக் கதறினார். அப்போது என்ன சொன்னார் என்பது மேலும் உருக்கத்திற்கு உரியது. “யார் வந்திருக்கிறார் என்று பாருங்கள். என் ஆசிரியர் என்று சொல்லி, நாள்தோறும் மனம் மகிழ்வீர்களே எவ்வளவு பெரிய இடத்திலும், அவர் வருகிறார் என்றால் எழுந்து வணங்குவீர்களே! இப்போது அவர் வந்திருக்கிறார். கால்நீட்டிப் படுத்திருக்கிறீர்களே! எழுந்திருங்களேன்” என்று அவருடைய துணைவியார், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதார். அது என்னை அவலத்தின் ஆழத்திற்குக் கொண்டு சென்றது.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன்,

 மேனாள் துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை

தொடர்புக்கு: thamizhavvai@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *