BREAKING NEWS

சொத்துக்காக அடுத்தடுத்த கொலைகள்..!

சினிமா முதல் சீரியல்கள் வரை  மருமகள், மாமியார் பிரச்னைகள், ஓய்ந்தபாடில்லை. சென்னை அயனாவரத்தில் சொத்துக்காக மாமியார் பத்மினியை துப்பாக்கி முனையில் கடத்திய வழக்கில் கைதாகி சிறையில் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார் பாசக்கார மருமகள் மேனகா.

இந்தக் குடும்பத்தில் சொத்துக்காக அடுத்தடுத்து கொலைகள் நடந்தது கூடுதல் அதிர்ச்சி தகவல். போலீஸ் விசாரணையில் மாமியாரை நான் கடத்தவில்லை, வீட்டுக்குதான் அழைத்துச் சென்றேன் என்று கூலாக கூறியிருக்கிறார் மருமகள் மேனகா. ஆனால், மாமியாரோ, என்னை மூன்று நாள்கள் காரில் கடத்தி சித்ரவதை செய்தது மருமகள் மேனகாவும் அவரின் கூட்டாளிகள்தான் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

என்ன நடந்தது என்று மாமியார் பத்மினிக்கு என்று அவரிடம் பேசினோம். “எனக்கும் சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பையைச் சேர்ந்த சுப்புராயனுக்கும் கடந்த 1981ம் ஆண்டு திருமணம் நடந்தது. 82ம் ஆண்டு செந்திலும் 84ம் ஆண்டு ராஜ்குமாரும் பிறந்தனர். என் கணவர், சுப்புராயன் சாலை அமைக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்துவந்தார். இதனால் அவருக்கு வருமானம் அதிகம் வந்தது. கிடைத்தப்பணத்தை சிக்கனமாக செலவு செய்தோம். படப்பை பகுதியில் வீடு, கடைகள், நிலம் என வாங்கினோம்.

மூத்தவன் செந்தில், அப்பாவின் வேலையை செய்தான். இளையவன் ராஜ்குமார் ஐடிஐ முடித்துவிட்டு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சூப்பர்வைஸ்ராகப் பணியாற்றி வந்தான். செந்திலுக்கு திருவள்ளூர் மாவட்டம் பெரியாளையம் கொமக்கம்பேடுவைச் சேர்ந்த மேனகாவை திருமணம் செய்து வைத்தோம். அடுத்து ராஜ்குமாருக்கு ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ஆனந்தியை திருமணம் செய்து வைத்தோம். அனைவரும் கூட்டு குடும்பமாக  படப்பையில் வசித்தோம்.

இந்தச் சமயத்தில் என் கணவரிடம் குடும்பச் சொத்துகளை பிரித்து தரும்படி மூத்தமகன் செந்தில் கேட்டான். அதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து செந்திலுக்கும் ராஜ்குமாருக்கும் சொத்துகளை என் கணவர் பிரித்துக் கொடுத்தார். அதில் செந்திலுக்கும் அவனின் மனைவி மேனகாவுக்கும் வருத்தம் ஏற்பட்டது. படப்பையில் மெயின் ரோட்டில் உள்ள இடம், ராஜ்குமாருக்கு பிரித்துக் கொடுத்ததால் மீண்டும் சண்டை வந்தது. ராஜ்குமாரின் பெயரில் உள்ள இடத்தை தங்களுக்குத் தர வேண்டும் என செந்திலும் மேனகாவும் சண்டை போட்டார்கள்.

கடந்த 2014ம் ஆண்டு ராஜ்குமார் கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில் மணிமங்கலம் போலீஸார் செந்திலை கைது செய்தனர். அதன்பிறகு மூத்த மருமகள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு படப்பையில் உள்ள ராஜேஷ்கண்ணா என்பவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகும் சொத்து தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. ராஜ்குமார் இறந்தபிறகு இரண்டாவது மருமகள் ஆனந்தி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். நானும் என் கணவரும் மட்டுமே படப்பையில் குடியிருந்தோம்.

2018-ம் ஆண்டு வீட்டிலிருந்து வெளியில் சென்ற என் கணவரை யாரோ வெட்டி கொலை செய்துவிட்டதாகக் கூறினார்கள். இந்த வழக்கை விசாரித்த மணிமங்கலம் போலீஸார் மூத்த மருமகள் மேனகாவின் நண்பர் ராஜேஷ்கண்ணா உள்பட சிலரை கைது செய்தனர். சொத்துக்காக மகனையும் கணவரையும் இழந்து தனிமரமாக வாழ்ந்துவந்தேன். அதன்பிறகும் எனக்கு நிம்மதியில்லை. என் பெயரில் உள்ள சொத்துகளை பேரன் பேத்திகளுக்கு எழுதித் தர வேண்டும் என மேனகா தரப்பில் எனக்கு மிரட்டல்கள் வந்தன. இதனால்தான் என்னுடைய சகோதரிகள் வீட்டில் நான் தஞ்சமடைந்தேன். ஒவ்வொரு சகோதரி மற்றும் அவரின் மகள்கள், மகன்கள் வீடுகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்திவந்தேன்.

இந்தச் சமயத்தில்தான்,  இந்தமாதம் எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆண் குரல், நான் உங்கள் இரண்டாவது மருமகளின் சகோதரர் பேசுகிறேன். உங்கள் பெயரில் உள்ள சொத்துகளை ஆனந்தியின் குழந்தைகள் பெயரில் எழுதித்தர வேண்டும். இல்லையெனில் உங்களை கொலை செய்யக்கூட தயங்கமாட்டேன் என்று கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த மிரட்டல் போன் அழைப்புக்குப்பிறகு மூத்த மருமகள் மேனகா, எனக்கு போன் செய்தார். அவரும் ஆனந்தியின் சகோதரர் தனக்கும் மிரட்டல் விடுத்ததாகக் கூறினார். அதோடு ஆனந்தியின் குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க என்னை அழைத்தார். ஆனால், நான் வரவில்லை என்று மேனகாவிடம் கூறினேன்.

அயனாவரத்தில் உள்ள என்னுடைய சகோதரியின் மகள் அமுதா வீட்டில் நான் தங்கியிருந்தேன். கடந்த 18-ம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்த என்னை சந்திக்க மேனகா மற்றும் அவருடன் சிலர் வந்தனர். உடனடியாக படப்பைக்கு புறப்படும்படி மேனகா என்னிடம் கூறினாள். ஆனால், நான் வரவில்லை என்று மறுத்தேன். உடனே அவர் என்னை வலுகட்டாயமாக கையைப்பிடித்து இழுத்து காரில் ஏற்றினார். அதை அந்தப்பகுதியில் உள்ளவர்கள் தட்டிக்கேட்டனர். அவர்களிடம் என் மாமியாரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என மேனகா கூறி சமாளித்தார். இன்னும் சிலரிடம் நான் காஞ்சிபுரத்தில் ஒருவரை கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதனால் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அமைதியாகிவிட்டனர்.

இரண்டு கார்களில் வந்த மேனகா மற்றும் அவரின் கூட்டாளிகள் என்னை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். காரில் ராஜேஷ்கண்ணா, 2 பெண்கள் என 5 பேர் இருந்தனர். அப்போது சத்தம்போட்டால் சுட்டுவிடுவேன் என  துப்பாக்கியைக்காட்டிமிரட்டினார்கள், அதனால் நான் அமைதியாக இருந்தேன். காரில் வைத்து என்னை சுற்றினார்கள். இதனால், அவர்கள் என்னை எங்கு கொண்டு சென்றார்கள் எனத் தெரியவில்லை. முதல் நாள் இரவு இருட்டறையில் அடைத்து வைத்தனர். சாப்பிட இட்லி கொடுத்தார்கள். அந்த இட்லியில் விஷம் கலந்திருக்கலாம் என பயந்து அதைச் சாப்பிடவில்லை. அதனால் என்னை அடித்து துன்புறுத்தினார்கள். இதனால் ஒரே ஒரு இட்லியை மட்டும் சாப்பிட்டேன். அதன்பிறகு என் பெயரில் உள்ள சொத்துகளை எழுதித்தரும்படி என்னை மிரட்டினார்கள். ஆனால், நான் அதற்கு சம்மதிக்கவில்லை. பகலில் என்னை காரில் அழைத்துச் சென்றனர். காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் இடத்தில் காரை நிறுத்தினார்கள். அப்போது ஆடு மேய்த்தவர்களிடம் நான் உதவி கேட்டேன். அவர்களிடம் மேனகா தரப்பினர் எனக்கு மனநல பாதிப்பு என்றும் இடம் வாங்க இங்கு வந்ததாகவும் கூறினர். இதனால் ஆடு மேய்த்தவர்கள் எனக்கு உதவி செய்யவில்லை. அந்த இடத்திலிருந்து என்னை மீண்டும் காரில் ஏற்றிக் கொண்டு வேறு இடத்துக்குச் சென்றனர். அவ்வப்போது டீ மட்டும் எனக்கு வாங்கித் தந்தார்கள். ஆனால், அவர்கள் சாப்பாடு, பிரியாணி என சாப்பிட்டனர்.

என்னைக் கடத்திவிட்டதாக அமுதா அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் போலீஸார் என்னைத் தேடும் தகவல் மேனகாவ்க்கு தெரிந்தது. இதனால் போனில் என்னை   போலீசாரிடம் பேசும்படி கூறினார்கள், அந்தநேரத்தில் அவர்கள் சொல்வதை கேட்பதைவிட எனக்கு வேறு வழியில்லை. அப்போது போலீசிடம் நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் என்னைத் தேட வேண்டாம் என்று கூறினேன். அதற்கு போலீஸார், நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், உடனே காவல் நிலையத்துக்கு வரும்படி கூறினார்கள். அதைக்கேட்ட மேனகா தரப்பு என் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டது.

மூன்று நாள்களாக காரிலும் இருட்டறையிலும் இருந்தேன். ஒரே ஒரு இட்லியைத் தவிர வேறு எதுவும் சாப்பிடவில்லை. என் கை, கால்களை கட்டி வைத்திருந்தார்கள். சத்தம் போடாமலிருக்க வாயையும் பொத்தி வைத்திருந்தனர். போலீசார் என்னை தீவிரமாக தேடியதை அறிந்த மேனகா தரப்பு என்னை காரில் அயனாவரத்தில் 21-ம் தேதி விட்டுவிட்டு தப்பி செல்ல முயன்றனர். அப்போது போலீசாரிடம் மேனகா சிக்கிக் கொண்டார். இனிமேலாவது என்னை மேனகா மற்றும் அவரின் கூட்டாளிகள் நிம்மதியாக வாழ விடுவார்களா” என்றார் கண்ணீருடன்.

இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் நடராஜன், “முதலில் குடும்ப பிரச்னை என்றுதான் கருதினோம். ஆனால், அமுதா கூறிய தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு நான், சப்-இன்ஸ்பெக்டர்கள் உத்ரகுமார், மணிக்குமார் மற்றும் போலீஸார் காரிலேயே 3 நாள்கள் பத்மினியை மீட்க போராடினோம். பத்மினி, மேனகா, ராஜேஷ்கண்ணா ஆகியோரின்  செல்போன் சிக்னலை வைத்து அவர்களைப் பின்தொடர்ந்தோம். பத்மினியை உயிரோடு மீட்டுவிட்டோம். இந்த வழக்கில் கைதான மேனகா, நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தைரியமாக பதிலளித்தார். மேனகாவின் கணவர் செந்தில் குறித்து கேட்டபோது அவரைக் காணவில்லை என்று கூலாக பதிலளித்தார். செந்திலைக் காணவில்லை என பத்மினி ஏற்கெனவே காவல் நிலையத்திலும் முதல்வர் தனிபிரிவிலும் புகார் கொடுத்துள்ளார். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. பத்மினியைக் கடத்த மேனகாவுக்கு உதவியர்களை பிடித்துவிடுவோம். இந்த வழக்கு துப்பு துலங்க சிசிடிவி கேமராவும்  பத்மினியைக் கடத்திய காரின் பதிவு நம்பரும்தான் முக்கியமாக இருந்தது” என்றார்.

மாமியாரை துப்பாக்கி முனையில் மருமகள் கடத்திய வழக்கின் பின்னணியில் சொத்து பிரச்னை உள்ளது. மேனகாவின் கணவர் செந்தில் எங்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் இல்லை. அவரும் சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வியும் சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. அந்த வழக்கை மணிமங்கலம் போலீசார்தான் விசாரிக்க வேண்டும். அதோடு பத்மினியின் கணவர் சுப்புராயன் கொலை வழக்கில் கைதான ராஜேஷ்கண்ணா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் என் மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுப்புராயன் பணம் வாங்கியிருந்தார். அவர் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. அதனால்தான் சுப்புராயனை கொலை செய்ததாக கூறியிருப்பதாக மணிமங்கலம் போலீசார் தெரிவித்தார். சுப்புராயன் கொலைக்கு சொத்து தகராறு காரணம் இல்லை என்பது போலீசாரின் வாதமாக உள்ளது. ஆனால், பத்மனி குடும்பத்தினர். சொத்துக்காகத்தான் சுப்புராயன், ராஜ்குமார் கொலை செய்யபட்டதாகக் கூறுகின்றனர்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் ஜோலி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்தப் பெண்ணும் சொத்து மற்றும் தகாத நட்பு ஆகியவை காரணமாக உறவினர்களை அடுத்தடுத்து கொலை செய்த தகவல் விசாரணையில் தெரியவந்தது. அதுபோலதான் சென்னையில் அடுத்தடுத்து சொத்துக்காக கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தக் கொலைகளுக்கும் மேனகாவுக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால், மாமியார் கடத்தல் வழக்கில் மேனகா கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணையின்போது மேனகா, நான் என் மாமியாரைக் கடத்தவில்லை என்று தைரியமாகக் கூறியுள்ளார். அதற்கு போலீசார், நீங்கள் கடத்தவில்லை என்றால் 3 நாள்களாக நாங்கள் தேடும்போது எதற்காக ஓடி ஒளிந்தீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு மேனகா பதிலளிக்காமல் மௌனமாக இருந்துள்ளார்.

இந்தக் கடத்தல் வழக்கில் ராஜேஷ் கண்ணா சிக்கியபிறகுதான் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது. மேலும் மேனகாவின் அப்பா மீதும் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 30 வயதாகும் மேனகா, மாமியாரைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் குடும்ப உறவுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

– எஸ்.எஸ்.எம். 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *