மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தில் போராட்டம் நடைபெற்றது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019ஐ தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவில் 2014-ம் ஆண்டு வரை குடியேறிய இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் ஆகியோருக்கு 7 ஆண்டுகளுக்கு பின் குடியுரிமை வழங்கப்படும். அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும்.
இதனால் உள்ளூர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிராந்திய அமைப்புகள், அரசியல் கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.இந்த மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் தலைநகர் குவஹாத்தியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் இப்போராட்டத்தில், கிரிஷக் முக்தி சங்கிராம் சமிதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ள அவர்கள், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான வாசகங்களை கொண்ட பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசாம் மட்டுமல்லாது, மேகாலயா, மிசோரம், அருணாச்சல் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.