மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு

ஜெயலலிதா நினைவிடத்தில்
முதல்-அமைச்சர், துணை முதல்வர் அஞ்சலி

ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது நினைவிடம் நோக்கி நடைபெற்ற மவுன ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

ஜெயலலிதா நினைவுநாள்

தமிழகத்தின் முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர் ஜெயலலிதா. இவர், கடந்த 2016ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிறகு, தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி

இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் வண்ண மலர்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, காலை முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர்களும், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளும் வாலாஜா சாலையில் இருந்து மவுன ஊர்வலமாக அவரது நினைவிடம் நோக்கி சென்றனர்.

அமைச்சர்கள்,

எம்.பி.க்கள்

இந்த ஊர்வலத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.  பின்னர், அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அஞ்சலி செலுத்தினர். மேலும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். இதையடுத்து, அமைச்சர்களும், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளும், அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கட்சியின் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரனும், அவரது கட்சி நிர்வாகிகளும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் மற்றும் பல்வேறு அமைப்பினரும் நேரில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *