BREAKING NEWS

தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு மதரீதியில் கூடாது…!

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், நடைபெற்ற விவாதம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை.  மக்கள் அனைவரையும், நம் தேசத்தின் குடிமக்கள் என்கிற பெயரில் நடைபெற உள்ள நடவடிக்கைதான் இது என்று விளக்கமளித்துப் பேசியிருக்கிறார்.  ஆனால், சமீபத்தில் ராஞ்சியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்து கொண்ட இதே மத்திய உள்துறை அமைச்சர் வேறுமாதிரி பேசியுள்ளார்.  பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில் சட்டவிரோதமாக இந்தியர்கள் தங்க முடியுமா? அது போலத்தான் இந்தியாவிலும் சட்டவிரோதமாகக் குடியேறி உள்ள மக்களை வெளியேற்றுவதில் என்ன தவறு இருக்கிறது என்றும் வினவி உள்ளார்.  எனவேதான், நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடுமுறையினைக் கொண்டுவர இருக்கிறோம் என்கிறார்.

(National Population Register and its Controversy) எனப்படும் என்.ஆர்.சி திட்டம் முதன் முதலில் அசாம் மாநிலத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்றது.  இந்த தேசிய குடிமக்கள் பதிவில் 3.3 கோடிப்பேர் விண்ணப்பித்திருந்தனர்.  இதில் 19 லட்சம் பேர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.  நாடு முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  மேலும் 40 லட்சம் பேர்களில் விண்ணப்பதாரர்களின் பெயர்கள் சரியான ஆவணம் இருந்தும் இந்தப் பதிவேட்டில் பெயர்கள் விடுபட்டுள்ளன.  இதில் மிகப்பெரும் சோகம் என்னவெனில் இந்திய வங்கதேசப் போரில் பங்கேற்று நம் நாட்டிற்காக போரிட்ட ராணுவ தளபதியின் குடும்பமும் விடுபட்டுள்ளது.  நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பதிவேட்டில் இல்லாத பெயர்கள் இவைகள் எல்லாமே பெரும்பாலும் வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.  1971-ம் ஆண்டிற்கு முன்பிருந்தே அசாமில் இருந்ததற்கான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும் என்பதில் இருந்துதான் முரண்பாடுகள் தோன்றுகின்றன.  நம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் இருந்தால் அவர் இந்தியக் குடிமகனாகிறார் என்கிறது 1955-ல் திருத்தப்பட்ட குடிமக்கள் மசோதா.  ஆனால், இந்த மசோதாவையே திருத்தும் முயற்சியில் தற்போது பா.ஜ.க அரசு இறங்கி உள்ளது.

வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக  குடியேறியவர்களைக் கண்டறிவதற்காக தொடங்கப்பட்ட இந்தக் கணக்கெடுப்பின் மூலம் பூர்வீக இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா போன்ற இந்திய மாநிலங்களில் இருந்து தேயிலைத் தோட்ட தொழிலுக்குச் சென்ற பல குடும்பங்கள், எப்படி ஆவணங்கள் வழங்குவது என்று புரியாமல் தவிக்கின்றனர். ஏனெனில் குடிமக்கள் பதிவேட்டிற்கான விண்ணப்பத்தில் அந்த அளவிற்கு ஆவணங்கள் கோரப்படுகின்றன.  அதனால் அங்கு பணிபுரியும் அரசு அதிகாரிகள் முலம், பல பேர் குடிமக்கள் பதிவேட்டிற்காக விண்ணப்பிக்கவில்லை என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.  தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஓர் ஆணின் பெயர் பதிவேட்டில் வருகிறது, ஆனால் அவரை மணந்து கொண்ட பெண்ணின் பெயர் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பதிவேட்டில் வரவில்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

சுமார் 4 கோடிப் பேர்கள் கொண்ட அசாமில் நடைபெற்ற கணக்கெடுப்பிற்கு இத்தனை குளறுபடிகள் என்றால் 120 கோடிப் பேர்களுக்கும் அதிகமாக உள்ள இந்தியா முழுமைக்கும் குடிமக்கள் அடையாள பதிவேடு நடத்துவது எவ்வளவு பெரிய சிரமம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.  பரந்து விரிந்த இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைக்கலாம் என்பதற்காகத்தான் ஏக இந்தியா என்ற பெயரில் நம் அரசியல் அமைப்புச் சட்டம் 1949-ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  இப்போது நடைபெறும் குடிமக்கள் கணக்கெடுப்பு நாட்டின் எல்லையோர மாநிலங்களில் மட்டும்தான் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது நாடு முழுவதும் என அறிவித்திருப்பது, அச்சத்தை உருவாக்குகிறது.  மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியாக இந்தக் கணக்கெடுப்பு இருந்துவிடக் கூடாது என்பதுதான், நாட்டின் நலம் விரும்பும் அனைவருக்குமான விருப்பம். ஏனென்றால் எல்லாவற்றையும் விட தேச ஒற்றுமையை காப்பது மிகவும் அவசியம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *