BREAKING NEWS

ஆவின் பாலில் நச்சுத்தன்மை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்

ஆவின் பாலில் நச்சுத்தன்மை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் ஆ.பொன்னுசாமி அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் ஆ.பொன்னுசாமி, அமைச்சர் ஜெயக்குமாருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-செய்தியாளர்களை நீங்கள் சந்தித்தபோது “பாலில் அப்லாடாக்சின் எம்1 நச்சுத்தன்மை குறித்து கேள்வி” எழுப்பியதும், ஆவின் பால் தரமான பால் என்றும், ஆவின் பாலில் கலப்படம் நடைபெறவில்லை என சான்றளித்த தோடு, தனியார் நிறுவனங்களின் பால் ஆய்வுக்குட்படுத்தப்படும் எனவும் தெரிவித்தீர்கள்.

ஏற்கனவே பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கடந்த 2017-ம் ஆண்டு தனியார் பால் நிறுவனங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில், அதனை அவரால் நிருபிக்க முடியாமல் போனதை அறியாத வரல்ல நீங்கள்.மேலும் “அப்லாடாக்சின் எம்1” என்கிற நச்சுத்தன்மை குறித்து சுகாதாரத்துறை அமைச்சரே வாய்மூடி மவுனமாக இருக்கும் போது மீன் வளத்துறை அமைச்சரான நீங்கள் தங்களுக்கு ஆவின் பாலில் கடந்த காலங்களில் நடைபெற்ற கலப்படம் தெரியாமல் போனது மிகுந்த வியப்பளிக்கிறது.இந்த நிலையில், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போன்று எந்த நிறுவனத்தின் பாலில் நச்சுத்தன்மை இருக்கிறது…? என்பதை தெரிவிக்காமல் உள்ளீர்கள்.

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வறிக்கை குறித்து பேசும் தாங்கள் முதலில் ஆவின் பாலை தரமான பால் தரமானது தான், கலப்படம் இல்லாதது, நச்சுத்தன்மை அறவே கிடையாது என்பதை எல்லாம் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபித்து விட்டு தாய்ப்பாலுக்கு நிகரான பால் ஆவின் என சான்றளியுங்கள்.

பால் தமிழகம் முழுவதிலும் கலப்படம் இன்றியும், நச்சுத் தன்மை இல்லாமலும் தரமான வகையில் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவும், அதனை தொடர்ந்து தீவிரமாக கண் காணிக்கவும் “சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, கால்நடைத்துறை, ஆவின், தனியார் பால் நிறுவனங்களின் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் அடங்கிய சிறப்பு உயர்நிலைக் குழு” அமைத்திட தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்து அதனை நடைமுறைப்படுத்திட ஆவண செய்யுங்கள்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *