BREAKING NEWS

சர்வதேச பசிப்பிணி பட்டியலில், பின்தங்கிய இந்தியா…!

சர்வதேச அளவில் 117 நாடுகளில் நடத்தப்பட்ட, பசி மற்றும் ஊட்டச்சத்து இல்லா நாடுகளின் வரிசை தற்போது வெளியாகி உள்ளது.  இதில் இந்தியா 102-ம் இடத்தில் உள்ளது.  இந்தியாவை விட வங்கதேசம் 88-வது இடத்திலும், பாகிஸ்தான் 94-வது இடத்திலும் இடம் பெற்றுள்ளது.  அதாவது பாகிஸ்தானை விட இந்தியாவில் உள்ளோர் ஊட்டச்சத்து மற்றும் பசிப்பிணியில் 8-வது இடத்தில் பின்தங்கி உள்ளனர்.  2014-ம் ஆண்டில் இதே போன்றதொரு ஆய்வு 77 நாடுகளில் நடத்தப்பட்டது.  இதில் இந்தியா 55-ம் இடத்தில் இருந்தது.  தற்போது 117 நாடுகளில் ஆய்வுகள் நடைபெற்றபோது முந்தைய கணக்கெடுப்பில் இருந்த இடத்தைவிட மேலும் பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல கடந்த 2017-ம் ஆண்டில் வாஷிங்டன் நகரில் இயங்கும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் (IFPRI) ஒன்று தனது ஆய்வு முடிவுகளை வெளிட்டபோது, 119 நாடுகளில் இந்தியா 100-வது இடத்தில் இடம்பெற்றது.  உலகளாவிய பசிப்பட்டியலில் (Global Hunger Index) இந்தியா தொடர்ந்து ஆண்டு தோறும் பின்தங்கி வருவது சரியல்ல என்று, பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  குழந்தைகளின் அதிகபட்ச ஊட்டச்சத்து குறைபாடு என்பது சமூக நலத்துறையில் போதுமான அளவு இந்தியா அக்கறை கொண்டு தேவையான நிதிகளை ஒதுக்காத காரணத்தால்தான் இந்த முடிவுகள் வெளிப்படுகின்றன, என்றும் அந்த ஆய்வுமையம் அறிவுறுத்தி உள்ளது.  இந்தப் பின்னடைவுக்கு, தவறான பொருளாதாரக் கொள்கையும் ஒரு காரணமாகும்.

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மந்தநிலையை நோக்கி தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது.  குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் உள்ள முக்கியமான துறைகளின் வளர்ச்சி முன்னர் எப்பொழுதுமே இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.  பொருளாதார பெருமந்த நிலை என்று சொல்லும் அளவிற்கு நம்நாடு தற்போது இருப்பது கவலைக்குரிய ஒன்றாகும்.

கடந்த 25 ஆண்டுகளில் காணாத பொருளாதார வீழ்ச்சி என்பது நடைபெற்று முடிந்த காலாண்டில் வெளியிடப்பட்ட அரசின் பொருளாதார அறிக்கை விவரித்துச் சொல்கிறது.  தற்போது இரண்டாவது காலாண்டிலும் இதே நிலை தொடர்வது மிகவும் ஆபத்தானது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.  பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறுகுறு தொழில்கள் எதிர்கொண்ட சவால்கள் அதேபோல வரிச் சீரமைப்பு என்கிற பெயரில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு, போன்ற மத்திய அரசின் தவறான கொள்கைகளால்தான் இன்று இந்தியா என்றுமில்லாத அளவிற்கு, பொருளாதாரத்தில் பின்தங்கிவருகிறது. மத்திய ஆட்சியாளர்கள் இதை ஏற்க மறுப்பதுதான் வேதனையைத் தருகிறது. 5 ரூபாய் மதிப்பில் தயாராகும் பிஸ்கட்(பார்லே) கம்பெனி மூடப்படுகிறது என்றால் இது வெறும் செய்தி அல்ல, இதன் பின்னால் இன்னுமொரு உண்மையும் மறைந்துள்ளது.  அமைப்பு சாரா தொழிலாளியாக இருக்கின்ற சாமானியன் கையில் 5 ரூபாய் தங்குவது குறைந்துள்ளது என்பதைத்தான் பிஸ்கட் கம்பெனியின் கதவடைப்பு நமக்குச் சொல்கிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜிடிபி) கடந்த ஐந்தாண்டில் இல்லாத அளவிற்கு 5 சதமாகக் குறைந்துள்ளது.  இத்தனைக்கும் எந்த அரசாங்கமும் செய்யாத வகையில் ரிசர்வ் வங்கியில் மொத்தமாக 1.75 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு கேட்டுப் பெற்றும் இரண்டாவது காலாண்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியைத்தான் சந்தித்துள்ளது. என்றால், தவறு சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவல்ல, மாறாக நம்மவர்கள் ஆட்சி செய்யும் முறைகளில்தான் கோளாறு உள்ளது.  லட்சம் கோடி ரூபாய் என அள்ளி வழங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டு, விவசாயிகள், நெசவாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என இவர்கள் பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் தீட்டி நிதிகளை ஒதுக்கி வழங்குவதுதான், நுகர்வோர் சந்தையை வலிமைப்படுத்தும்.  பணப்புழக்கம் அதிகமானால்தான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்பதுதான் கடந்தகால வரலாறு. அதேபோல், ஊட்டச்சத்து குறைபாடில் இந்தியா பிந்தங்கி உள்ளது என்பதை அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுதல் அவசியமாகும். எனவே, மத்திய அரசு விரைந்து செயல்பட்டு இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான செயல்களை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *