BREAKING NEWS

தாமிரபரணியில் கடும் வெள்ளம்

தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் தண்ணீர் சூழ்ந்தால் வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.தொடர் மழைநெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 3 மாவட்டங்களிலும் விட்டு விட்டு சாரல் மழையும், கனமழையும் பெய்தது.

இதன் காரணமாக தென் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது. இதனால் அணை பாதுகாப்பை கருதி நேற்று வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. நள்ளிரவில் சிறிது நேரம் சாரல் மழையும், சிறிது நேரம் கனமழையும் என மாறி மாறி பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இடை விடாது மழை கொட்டியது.இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நேற்று அகஸ்தியர் அருவி பாலம், குறுக்குத்துறை முருகன் கோவில் மண்டபம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின. நேற்று காலை ஒரே நேரத்தில் 14 ஆயிரம் கன அடிக்கு மேல் திறக்கப்பட்டதால் பாபநாசம் படித்துறை யாரும் குளிக்க முடியாத அளவுக்கு மூழ்கியுள்ளது. இதுபோல அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி பகுதியிலும் அனைத்து படித்துறைகளும் மூழ்கியுள்ளன. தாமிரபரணி ஆற்றில் காட்டாற்று வெள்ளமும் கலந்து ஓடுவதால் நெல்லை பகுதியில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவில் முழுவதுமாக மூழ்கியது. கோவிலின் கோபுரம் மட்டுமே தெரிகிறது.

தைப்பூச மண்டபம் உள்பட கரையோர படித்துறை மண்டபங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்கு யாரும் குளிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. திருமலைநம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து மழை நீடிப்பதால் களக்காடு ஆறுகளில் கரை புரளும் வெள்ளப்பெருக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையொட்டி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்கும் படி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *