விஜய் மீது பார்வையற்ற மாணவர்கள் புகார்

நடிகர் விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளியில் நடந்தது. அதில் விஜய் கலந்து கொண்டார்.
அந்த படப்பிடிப்பில் விஜய்யை சந்திக்க ஆவலாக இருந்த பார்வையற்ற மாணவர்களை விஜய் அலட்சியப்படுத்தினார் என இப்போது புதிய குற்ற சாட்டு எழுந்துள்ளது.
இது பற்றி பள்ளியின் தமிழ் ஆசிரியர் ப. சரவண மணிகண்டன் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
திரு. விஜய் அவர்களே!
உங்களின் படப்பிடிப்பு எமது பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
அதன்பிறகு எமது பள்ளி வளாகம் படும்பாடு அடடா மோசம்.
ஒரு சிறு தொகையை எங்கோ செலுத்திவிட்டு, இந்த மூன்று நாட்களும் படப்பிடிப்பு என்ற பெயரில் படப்பிடிப்புக்குழு ஏதோ பள்ளியையே விலைக்கு வாங்கிவிட்டதுபோல் எங்கள் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடம் நடந்துகொண்டதெல்லாம் பெரு அநியாயம்.
முதலில் எங்கள் மாணவர்களால் தடையின்றிப் பள்ளி வளாகத்தில் நடமாட முடியாதபடிக்கு எங்கு பார்த்தாலும் கார்கள், வாகனங்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியேற முடியாது. வெளியே இருந்து வருபவர்கள் உள்ளே நுழைய முடியாதபடிக்கு மூன்று நாட்களும் ஏக கெடுபிடிகள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களைப் படித்துக்காட்ட வந்த தன்னார்வலர்களும் தடுத்து நிறுத்தப்பட்டு சிலர் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமையன்று, உங்களைச் சந்தித்து இரண்டு நிமிடங்கள் பேசிவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் எங்கள் பள்ளி மாணவர்கள் மூன்று மணி நேரமாகக் காத்து இருந்தனர். ஆனால் நீங்களோ அவர்களைப் பார்வையுள்ளவர்கள் என்று கருதிக்கொண்டு, ‘சைகை‘ செய்துவிட்டு சென்றுவிட்டீர்கள். உங்கள் குழுவினரை அணுகி எங்கள் மாணவர்களில் சிலர் கேட்டதற்கு, “கண்ணு தெரியாத நீங்க எல்லாம் பார்த்து என்ன பண்ணப்போற” எனக் கேவலமாகப் பதில் வந்திருக்கிறது.
ஆசிரியர்கள் இருவர் உங்கள் குழுவினரை அணுகிப் பேசினோம். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, முதலில் மாலை நான்கு மணிக்கு சந்திப்பு என்றார்கள். பிறகு உங்கள் மேலாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட . உதயக்குமார் என்பவர் கண்டிப்பாக மாலை ஆறுமணிக்குச் சந்திக்கலாம் என்றும், மாணவர்களை ஒருங்கிணைக்குமாறும் கூறிச் சென்றார். அதன்படி மாணவர்களை ஒருங்கிணைத்தோம். 1 ½ மணி நேரம் காத்திருந்தோம்.
ஆனால் நீங்களோ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, ரகசியமாய் கிளம்பிவிட்டீர்கள்.அது தெரியாமல் மேலும் ஒரு மணி நேரம் காத்திருந்தது வேதனை..
சரி, மாணவர்களை விடுங்கள். தாங்கள் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு வந்திருக்கிறீர்கள். நிச்சயம் சில வினாடிகளாவது அவர்களைச் சந்திக்கவேண்டும், அவர்களிடம் உரையாட வேண்டும் என ஒரு சக மனிதனாக ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை.
அரசுப்பள்ளி, அதுவும் பார்வையற்றோர் பள்ளியென்றால் அவ்வளவு குறைவான மதிப்பீடா? ஒரு இரண்டு நிமிடங்கள் பேசுவதில் உங்களுக்கு எத்தனை கோடி இழப்பு வந்துவிடும்?
ஒரு பார்வையுள்ள ரசிகனைப்போல, ஸ்டைல், நடனம், முகபாவனை, மிடுக்கான ஆடை அலங்காரத்தின் வழியே அல்லாமல், வெறும் உங்களின் கோர்வையான வசனங்களால், உங்கள் குரலால் மட்டுமே உங்களின்மீது பிரியமும், பேரன்பும் கொண்டிருக்கிற பார்வை மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு, எல்லாம் வேஷம் என்பதைப் புரியவைத்தமைக்கு மிக்க நன்றி . விஜய் அவர்களே!‘‘இவ்வாறு அதில் கூறியுள்ளார்.. இந்த விஷயம் திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *