அம்மா திருமண மண்டபம், 610 குடியிருப்புகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்புகள் மற்றும் மதுரையில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
குடியிருப்புகள்
அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதித் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில், பெருவாரியாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்காக 2,800 குடியிருப்பு அலகுகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக கட்டித் தரப்படும் என்று ஜெயலலிதா 2015-ம் ஆண்டு சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சென்னை, மகாகவி பாரதி நகர் திட்டப் பகுதியில் சுயநிதி திட்டத்தின் கீழ், 2.46 ஏக்கர் பரப்பளவில், தூண் தளம் மற்றும் 15 தளங்களுடன், 129 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 510 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
அனைத்து வசதிகள்
இக்குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 688 முதல் 721 சதுர அடி கட்டட பரப்பளவுடன், இரண்டு படுக்கை அறைகள், கூடம், சமையலறை, படுக்கையறையுடன் இணைந்த கழிவறை மற்றும் குளியலறை, குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டப் பகுதியில் குடிநீர் வசதிக்கான ஆழ்துளை கிணறு, கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, மின் மோட்டார் அறை, மழைநீர் சேகரிப்பு வசதிகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
அம்மா திருமண
மண்டபம்
மேலும், சென்னை, முகப்பேர், ஜெ.ஜெ நகர் கிழக்கு திட்டப் பகுதியில், தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன், 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 40 உயர்வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, புலியூர் திட்டப் பகுதியில், தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன், 11 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 48 மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, மந்தவெளிப்பாக்கம் திட்டப்பகுதியில், தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன், 2 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 உயர்வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், மதுரை, சாத்தமங்கலம் கிராமம், அண்ணா நகரில், தூண் தளம் மற்றும் மூன்று தளங்களுடன், 5 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம் என மொத்தம் 162 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 610 குடியிருப்புகள் மற்றும் அம்மா திருமண மண்டபத்தை முதலமைச்சர் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *