BREAKING NEWS

மதுரையில் ஒரு காந்தி..!

மதுரை மாநகரில் தற்போது இயங்கி வரும் இராஜாஜி அரசு மருத்துவமனையின் இடம் என்பது விடுதலைப் போராட்ட காலத்தில் 1920 களில், அடர்ந்த வேலமரங்கள் நிறைந்த காடாக இருந்த பகுதியாகும்.  அன்றைக்கிருந்த மதுரை நகரின் இந்த ஒதுக்குப்புறமான பகுதியில்தான் கள்ளுக் கடைகளும் இருந்தன.  வெள்ளையர்களை எதிர்த்த தேச விடுதலைப் போராட்டத்திற்கு நிகரான முறையில், கள்ளுக்கடைக்கு எதிரான போராட்டங்களும் மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழகம் முழுவதிலும் நடைபெற்றது.  போதை தரும் கள்ளினை குடிக்கும் குடிமகன்களின் குடும்பம் வீணாவதுடன், அரசை எதிர்த்து நடக்கும் சுதந்திர போராட்டமும் பல நேரங்களில் மக்கள் மத்தியில் புரியாமல் போவதற்கும் இந்தக் கள்ளுக்கடைதான் காரணம் என நம்பினார் காந்தி.  அதனால்தான் வெவ்வேறு வடிவங்களில் கள்ளுக்கடைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.  அப்படித்தான் 1930 ஜூலை 30-ல் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள கள்ளுக்கடை எதிரில் சாத்வீகமான முறையில் போராட்டம் தொடங்கியது.

கள் குடிக்கச் செல்வோரின் கால்களைத் தொட்டு வணங்கி, தயவு செய்து கள்ளை உண்ணாதீர்கள் அது உங்களுக்கும் நாட்டிற்கும் நல்லதல்ல என்று மென்மையான முறையில் போராட்டம் நடைபெற்றது.  கள் குடிக்க வருவோரில் சிலர் இந்த வேண்டுகோளை நிராகரிக்க முடியாமல் திரும்பச் செல்கின்றனர்.  சிலர் அறிவுரையை புறக்கணித்து குடிக்கச் சென்றனர். காந்தியத் தொண்டர்கள் அமைதியுடன் போராட்டத்தை தொடர்ந்தனர்.  குல்லா அணிந்த காந்தியின் தொண்டர்களின் கூட்டம் ஒரு கட்டத்தில் அதிகரிக்கவே, அங்கு காவல்துறையினர் வருகின்றனர். இந்தக் கூட்டத்தை கலைக்க வேண்டும் என்பதற்காகவே எங்கிருந்தோ சில சமூக விரோதிகள் காவல் துறையினரை நோக்கி கற்களை வீசுகின்றனர்.  உடனடியாகக் காவல் துறை கண்மூடித்தனமான முறையில் தடியடி நடத்தி, பின்னர் துப்பாக்கிச் சூடும் நடத்துகிறது.  7 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரை விடுகின்றனர்.  நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைகின்றனர்.

இந்தப் போராட்டத்தால் மதுரை நகரமே பரபரப்பாகிறது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, மதுரை மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூடுகிறது. அதன் தலைவரான 27 வயது இளைஞர், மீண்டும் நாளை அதே கோரிப்பாளையம் கள்ளுக்கடை முன்பு என் தலைமையில் மறியல் நடைபெற உள்ளது என்று அறிவிக்கிறார்.  இந்த அறிவிப்பினைக் கேட்ட மதுரை நகர மக்கள் மறுநாள் காலையில் இருந்து அலை அலையாக வடக்குமாசி சந்திப்பில் ஒன்று சேருகிறார்கள்.  வழக்கம் போல காவல் துறை பேரணியை தடுக்க கைகளில் துப்பாக்கியுடன் கூட்டத்தினர் அருகில் வருகிறது.  அந்த 27 வயது இளைஞரான என்.எம்.ஆர்.சுப்புராமன், சுடுவதாக இருந்தால் என்னை சுட்டுவிட்டு முன்னேறு என்று சட்டையை கழட்டி திறந்த மார்புடன் காவலரை நோக்கி முன்னேறுகிறார்..! வேறு வழியல்லாமல் அமைதியான முறையில் காவல்துறையினர் சுப்புராமன் உள்ளிட்ட பல முன்னணி தொண்டர்களை கைது செய்கின்றனர்.  சுப்புராமன் தனது சொந்தப் பணத்தில் செலவு செய்து அரசாங்கத்திற்கு எதிராக மக்களைத் திரட்டி போராடி வருவதால் இவர் மீது தீவைப்பு, கொள்ளை போன்ற பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகிறார்.  எந்த வழக்கறிஞரையும் தன் சார்பாக வாதாட அனுமதியாமல் சுப்புராமனே நீதிமன்றத்தில் வாதிடுகிறார்.  “என் தேச விடுதலைக்காகவும், அதேபோல என் நாட்டுமக்கள் தீவிர குடிகாரர்களாக மாறுவதைத் தடுக்கும் முறையில் போராட்டம் நடத்துவது குற்றம் எனில், இப்போதே நீங்கள் என்னை வெளியில் விட்டாலும் மீண்டும் அந்தக் குற்றத்தை நான் தொடர்ந்து செய்வேன்.  உங்களின் சட்டப்படி நீங்கள் எந்தத் தண்டனை, வழங்கினாலும் அதனை நான் போற்றும் தலைவர் அண்ணல் காந்தியின் பெயரால் உவகையுடன் ஏற்றுக்கொள்வேன்” என்று பதற்றப்படாமல் சுப்புராமன் அளித்த வாக்குமூலத்தால் நீதிமன்றமே அதிர்ந்து போகிறது. முடிவில் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டைனையையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிடுகிறார்.

கடலூர் சிறையில் தியாகி அவினாசிலிங்கம் தொடர்பு கிடைக்கிறது.  ஒருமித்தக் கருத்துடைய இருவரும் சிறையில் இருந்த ஓய்வு காலத்தைப் பயன்படுத்தி தென்னாப்பிரிக்காவில் காந்தியின் சத்தியாகிரகம் என்னும் ஆங்கில நூலை மொழிபெயர்த்து, பின்னர் வெளியிடுகின்றனர். வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இன்றி வாழ்ந்த தியாகிகளில் சுப்புராமனும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. இரண்டு முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் என இருந்த போதும் எதற்கும் பென்சன் வேண்டாம் என்று மறுத்தவர். அது மட்டுமல்ல விடுதலை பெற்ற பிறகு தியாகிகளை அடையாளம் கண்டு 5 ஏக்கர் நிலம் உள்ளிட்ட உதவித்தொகைகளையும் வேண்டாம் என்று சொல்லி நாட்டிற்கே தம்மை அர்ப்பணித்து வாழ்ந்தவர்.

1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் மதுரையில் இருந்த பிரபலமான தொழில் அதிபர்களில் ஒருவரான மல்லி நாட்டாண்மை ராயலு, காவேரி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தவர்தான், என்.எம்.ஆர்.சுப்புராமன்.  13 வயதில் காந்திஜி கஸ்தூரிபாவை கரம் பிடித்தார் என்றால், 15 வயதில் சுப்புராமன் பர்வதவர்தனியை மனைவியாக ஏற்கிறார்.  செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பர்வதவர்தனி பிறந்திருந்தாலும், கணவனின் விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக துணை நின்றார்.  அந்நியத் துணிகளை தீவைத்து எரிப்போம் என்று மதுரையில் உள்ள மாதர்களைத் திரட்டி நடுரோட்டில் தீவைத்து எரித்தவர் பர்வதவர்தனி! அதுமட்டுமல்ல தடையை மீறி கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால் 6 மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.  சுப்புராமனின் இல்லத்திற்கு காந்திஜி வருகை தந்தபோது அவரை ஆரத்தி எடுத்து வரவேற்கிறார் பர்வதவர்தனி.  அதை ஏற்க விரும்பாத காந்தி, “நான் உண்மையில் மகிழ்ச்சி அடைய வேண்டும் எனில் நீ அணிந்திருக்கும் நகைகள் அரிஜன மக்களின் வளர்ச்சிக்காக வழங்க வேண்டும்” என்கிறார் காந்தி! ஒரு நிமிடம் கூட தாமதிக்காத வர்தனி உடனே வீட்டிற்குள் சென்று தான் அணிந்திருந்த வைரத்தோடு உள்ளிட்ட அனைத்து நகைகளையும் கழட்டிக் கொண்டு ஒரு தட்டில் ஏந்தி வந்து ஒப்படைக்கிறார்.  காந்தியும், இல்லற வாழ்வில் இருந்து கொண்டுதான் விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றார்.  ஆனால், சுப்புராமன் பர்வதவர்தனி தம்பதியரோ விடுதலைக்குப் பின்னர்தான் இல்லற வாழ்வு என்கிற தவ வாழ்க்கையினை மேற்கொள்கின்றனர்.  மற்றொருமுறை காந்தி மதுரைக்கு வருகிறபோது சுப்புராமனின் மணலூர் பங்களாவில் தங்குகிறார். அப்போது காந்தியை தனிமையில் சந்தித்து, அனைத்துப் பெண்களைப்போல் நானும் ஒரு குழந்தைக்குத் தாயாக விரும்புகிறேன்.  ஆனால், எங்களின் சத்திய வாழ்க்கை இதற்குத் தடையாக உள்ளது என்று கண்ணீர் மல்க வேண்டுகிறார் வர்தனி! அதிர்ந்து நின்ற காந்தி, தன் சீடரான சுப்புராமனிடம் இல்லற வாழ்வை புறக்கணிப்பது தர்மத்திற்கு விரோதமானது.  நான் அடுத்தமுறை உன்னை சந்திக்கிறபோது மகிழ்வான செய்தியினை எதிர்பார்ப்பேன் என்கிறார் காந்தி! அதன் பிறகுதான் அந்த லட்சியத் தம்பதியர்க்கு மகள் ஒருத்தி பிறந்தாள். அந்தக் குழந்தைக்கு காந்தியே சீதாபாய் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.  செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து, பொது வாழ்க்கையில், சித்ரவதைக்கு நிகரான இடர்பாடுகளை எதிர்கொண்டு வாழ்க்கையை நகர்த்துவது மிகக் கடினமானது.  அதை இன்முகத்துடன் தன் கடைசி மூச்சு உள்ளவரையில் செயது காட்டியவர் சுப்புராமன்.  மதுரை நகராட்சித் தலைவராக சுப்புராமன் இருந்தபோது, இரண்டாவது உலகப்போர் தொடங்குகிறது.  இந்திய மக்களின் அனுமதியைப் பெறாமலேயே இந்தப் பொரில் இங்கிலாந்து இந்தியாவை ஈடுபடுத்தியது தவறு என்றார் காந்தி.  அதனால் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் நாடெங்கும் நடைபெற்றது. அப்போது மதுரை நகர்மன்றத்தைக் கூட்டி நகர்மன்றத் தலைவர் என்கிற முறையில் யுத்த எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றினார் சுப்புராமன். நகராட்சி ஊழியர்கள் யாரும் யுத்த நிதி வழங்கக் கூடாது என்றும் மதுரை நகருக்குள் எங்கேயும் யுத்த நிதி வசூல் செய்யக் கூடாது. மேலும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமை மதுரை நகர எல்லைக்குள் நடத்துவதற்கு தடை விதிக்கும் தீர்மானத்தையும் நிறைவேற்றினார். துணிச்சலான இந்த நடவடிக்கைகள் தமிழகத்தில் வேறு எந்த ஒரு நகராட்சித் தலைவரும் செய்யவில்லை. இதற்குப் பின்னர்தான் மதுரை கோகலே என்று சுதந்திர போராட்ட வீரர்கள் அழைத்தனர் என்பதும் வரலாறாகும். இதனால் அன்றைய சென்னை கவர்னராக இருந்த ஆர்தர்ஹோப் அவர்களின் கடுங்கோபத்திற்கு சுப்புராமன் ஆளானார்.  மதுரை நகராட்சியை கலைக்க உத்தரவிட்டார் கவர்னர்.

அத்துடன் இந்திய பாதுகாப்புச் சட்டப் பிரிவு 26(5) ன் கீழ் நள்ளிரவில் சுப்புராமன் வீட்டிற்குள் நுழைந்து கைது செய்கிறது காவல் துறை.! மதுரைச் சிறையில் அடைத்தால் பிரச்சனை ஏற்படும் என அஞ்சிய காவல் துறை திருச்சி சிறையில் அடைக்கிறது.  மதுரை நகர் முழுவதும் இந்தக் கைதை கண்டித்து போர்க்கோலம் பூண்டது.  கடையடைப்பு, கண்டன ஊர்வலம், தடியடி என மதுரை மீணடும் ஒரு ரத்தக் களரியைச் சந்தித்தது.  சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சுப்புராமன் போன்ற தியாகிகள் எதிர்பார்த்த அரசாங்கம் இல்லை என்பதோடு, காங்கிரசில் நிலவிய கோஷ்டிப் பூசல்களும் சுப்புராமன் மனத்தை பாதிக்கச் செய்தன.  இந்த சூழ்நிலையில் அரசியல் பொது வாழ்வில் நீடித்திருக்க முடியாது என்று உணர்ந்த சுப்புராமன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து 10 ஆண்டுகள் வரையில் காந்திய நிர்மாணப் பணிகளில் குறிப்பாக அரிசன மக்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறார். அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சுப்புராமனை 1962 நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் போட்டியிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் வேண்டுகோள் வைக்கிறது.  மறுக்கிறார் சுப்புராமன்.  பின்னர் சுப்புராமனிடம் காமராசர் தனிப்பட்ட முறையில் பேசுகிறார், பலன் இல்லை.  சுப்புராமனின் நெருங்கிய நண்பரான அவினாசிலிங்கம் பேசிப் பார்க்கிறார்.  எந்த மாற்றமும் இல்லை. கடைசியில் பிரதமராக இருந்த நேருவே தொலைபேசி மூலம் அழைத்துப் பேசி இணங்க வைக்கிறார்.  அனைவரும் எதிர்பார்த்தபடியே   தேர்தலில் வெற்றி பெறுகிறார். எம்.பி. பதவியைக் கொண்டு மக்கள் சேவை பயணத்திற்கு மீண்டும் வருகிறார்.  சேலம் பாக்ஸைட் தொழிற்சாலை, காரைக்குடி பொறியியல் ஆராய்ச்சிக் கழகம், கன்னியாகுமரியை இணைக்கும் அகல ரயில் பாதை போன்ற திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முழு முதற் காரணமாக இருந்தவர் சுப்புராமன். இதற்கு நன்றி செலுத்தும் வகையில் மதுரை வைகை மேம்பாலத்திற்கு என்.எம்.ஆர்.சுப்புராமன் பாலம் என பெயர் சூட்டியது தமிழ்நாடு அரசு.  ஆனால், மக்களோ மதுரை காந்தி என்று பெருமையுடன் அழைத்தனர்.                                                                                            

நீ.சு.பெருமாள்,

தொடர்புக்கு: giriperumal1964@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *