BREAKING NEWS

7 பேரை விடுதலை செய்ய முடிவு ; உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநருக்கு பரிந்துரை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி தீர்மானம்.

 

 

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி தமிழகத்துக்கு வந்திருந்தபோது, பெரும்புதூரில் கொலை செய்யப்பட்டர். இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் பேரறிவாளன்,முருகன் மற்றும் சாந்தனுக்கு முதலில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுட்கால சிறைதண்டனையாக குறைக்கப்பட்டது. நளினி,ரவிச்சந்திரன் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோரும் ஆயுள்தண்டனை பெற்றவர்கள்.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் பல ஆண்டுகாலமாகத் தனது மகன் பேரறிவாளன் தவறுதலாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் வழக்கு நடத்தப்பட்ட விதத்திலும் பிரச்சினை இருந்தது என்றும் கூறி வருகிறார். தூக்குத்தண்டனைக்கு எதிராக போராடிய அவர், தண்டனை காலத்தில் பேரறிவாளனின் நன்னடத்தையைக் காரணமாக கொண்டு அவரை விடுவிக்கவேண்டும் என்று கோரிவந்தார்.

வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என பல சமூகஅமைப்புகள் பிரசாரம் செய்துவந்த நிலையில், அவர்களின் விடுதலை தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுதலை பற்றி முடிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு அவருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, தமிழக அமைச்சரவை இன்று கூடி முடிவுசெய்யவுள்ளது. 7 பேரின் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை கேட்டபோது, பதில் ஏதும் வரவில்லை. ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநியைில் உச்சநீதிமன்ற தீர்ப்பு 7 பேருக்கும் சாதகமாக வந்திருந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றார்கள்.

இந்த கூட்டத்தில் எழுவர் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும், பின்னர் அந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன் ஆகிய 3 பேரும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தங்களை விடுதலை செய்யக் கோரி ஆளுநர், முதல்வர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நேற்று தனித்தனியே சிறைத்துறை மூலம் நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளனர்.




Leave a Reply