BREAKING NEWS

40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…?

 

 


நாட்டிலேயே அசாம் மாநிலத்தில் மட்டும் ஒரு வித்தியாசமான முறை அமலில் உள்ளது. அது யாதெனில், அம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி.) இரண்டாவது மற்றும் கடைசி வரைவுப்பட்டியல் வெளியிடுவதாகும்.

இந்த குடியுரிமை பெற்றவர்களே இந்தியர்கள் ஆவார்கள். இந்த பட்டியலின் இரண்டாம் தொகுதி, கடந்த திங்கட்கிழமை வெளியானது. இந்தப் பட்டியலில் 2.89 கோடி பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பித்த மக்களின் எண்ணிக்கை 3.29 கோடி.

இதனால், மீதமுள்ள சுமார் 40 லட்சம் பேரின் இந்தியக் குடியுரிமை மறுக்கப்பட வழியேற்பட்டுள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இதை எதிர்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதனால் அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

1971ம் ஆண்டு மார்ச் 25க்கு முன்பிருந்தே அந்த மாநிலத்தில் வசிப்பவர்களின் பெயர்களை தொகுப்பதே இந்தப் பட்டியல். சட்டவிரதோக் குடியேறிகளை களையெடுப்பதே இந்தப் பட்டியலின் நோக்கம். என்.ஆர்.சி.யின் முதல் வரைவுப் பட்டியல் கடந்த டிசம்பர் 31-ஜனவரி 1க்கு இடைப்பட்ட இரவில் வெளியானது.

அதில் 1.9 கோடி பெயர்களே இருந்தன. இதுகுறித்து நிருபர்களை சந்தித்த, இந்தியப் பதிவுத் துறைத் தலைவர் சைலேஷ் சதுர்வேதி இந்தத் தகவல்களை தெரிவித்தார். “இந்தியாவுக்கும், அசாமுக்கும் இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நடவடிக்கையின் அளவு முன்னெப்போதும் இல்லாதது. இது உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடந்த சட்ட நடவடிக்கை” என்று அவர் குறிப்பிட்டார்.

அசாம் மாநிலத்தில் வசிக்கும் அனைவருமே தங்கள் குடியுரிமையை நிரூபிக்க உரிய ஆவணங்களோடு இந்தப் பட்டியலில் இடம் பெற விண்ணப்பிக்கவேண்டும் என்று கோரப்பட்டது. மாநிலத்தில் வசிக்கும் பெங்காலி முஸ்லிம்களின் குடியுரிமையை மறுக்கவும், அவர்களை முடியுமானால், நாடு கடத்தவும் இந்தப் பட்டியலை ஒரு சாக்காகப் பயன்படுத்துவதே நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கம் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.

பொதுவாக அசாம் மாநிலத்திற்கு, 1985-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி 1971-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதிக்குள் அம்மாநிலத்திற்குள் வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட்டு அசாம் மாநிலத்தில் உள்ள 3.29 கோடி பேரில் 2.89 கோடி பேர் மட்டுமே இந்திய குடிமக்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது மீதமுள்ள 40 லட்சம் பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கையால் சொந்த நாட்டிலேயே 40 லட்சம் மக்கள் அகதிகளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். காலங்காலமாய் அசாமில் வசித்து அசாமின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வந்த 40 லட்சம் பேரை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என முத்திரைக் குத்தி அவர்களை அகதிகளாக்க நினைப்பதும் தெரிகிறது.

இதனால் அசாமில் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தப்பித்து அகதிகளாக வந்த இஸ்லாமிய சிறுபான்மையினர் பாதிக்கப்படுவது நிதர்சனம். ஆதலால், அசாம் அரசு தேசிய குடிமக்கள் ஆவணத்தில் விடுபட்டுள்ள 40 லட்சம் பேரை உடனடியாக சேர்த்து புதிய ஆவணங்களை வெளியிட வேண்டும்.

அதற்கு மத்திய அரசு அசாம் மாநில அரசிற்கு உரிய அழுத்தங்களைத் தரவேண்டும். இந்த நிலையில், பட்டியலில் இடம் பெறாதவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று தெரிவித்துள்ளார் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பான எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளித்த அவர், அவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க போதிய வாய்ப்பளிக்கப்படும் என்றும், உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஏதும் இருக்காது என்றும் ெதரிவித்தார். இதனால் அந்த 40 லட்சம் பேரும் தற்காலிக நிம்மதி பெருமூச்சு அடைந்து உள்ளனர்.
Leave a Reply