தற்போதைய செய்திகள்

3-வது அணி அமைக்க திட்டம்:மம்தா பானர்ஜி 10-ந் தேதி சென்னை வருகை கருணாநிதி, மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்…….

சென்னை,

தேசியளவில் மூன்றாவது அணி அமைப்பதற்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக வரும் 10-ந் தேதி சென்னை வருகிறார். அப்போது, கருணாநிதியையும் சந்தித்து உடல்நலம் விசாரிக்கிறார்.

மூன்றாவது அணி
நாட்டில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிராக, மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்-அமைச்சர் சந்திரசேகர் ராவ் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திரசேகர் ராவின் கருத்துக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட நாட்டின் பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ் கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தினார். இதுபோல், கடந்த சில தினங்களுக்கு பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆந்திர முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடுவை மம்தா பானர்ஜி சார்பில் அவரது கட்சி எம்.பி.க்கள் சுதிப் பண்டோபாத்பாய், டெரிக் ஓ பிரெய்ன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார்கள்.

சென்னை வருகை

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர், மம்தா பானர்ஜி தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு ெகாண்டார். அப்போது, மூன்றாவது அணி தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியதாகவும், அதுதொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவு எடுப்பதாகவும் கூறியதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்த நிலையில், மம்தா பானர்ஜி வரும் 10-ந் தேதி சென்னை வருகிறார். 10 மற்றும் 11-ந் தேதி இரண்டு நாட்கள் சென்னையில் தங்குகிறார். அப்போது, உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வு பெற்றுவரும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மற்றும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது, மூன்றாவது அணி தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா காந்தி விருந்து அளித்ததும், அதில் திரிணாமுல் காங்கிரசும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply