தற்போதைய செய்திகள்

28,000 மக்கள் பயன்பெறும் வகையில்-நொளம்பூரில் குடிநீர் திட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்….

சென்னை,
28 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில், நொளம்பூர் குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
நொளம்பூர் குடிநீர் திட்டம்
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் நொளம்பூரில் 28 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் வழங்கும் திட்டம் ஆகியவற்றை முதல்-அமைச் சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 28,000 மக்கள் பயன்பெறுவார்கள். சென்னை, காரம்பாக்கம் பகுதிகளில் 20 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டம், மதுரவாயல் பகுதிகளில் 60 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம்.
பாதாள சாக்கடை
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு மற்றும் மயிலாடும்பாறை ஒன்றியங்களைச் சார்ந்த ஆத்தங்கரைப்பட்டி மற்றும் 14 இதர ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம், பெரியகுளம் நகராட்சியில் 26 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் கம்பம் நகராட்சியில் 18 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றை முதல்வர் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நுங்கம்பாக்கம், பள்ளி சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், திருவல்லிக்கேணி, வி.ஆர்.பிள்ளை தெருவில் 3 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம்.
புதிய பூங்கா
ஆலந்தூர்-வி.ஜி.என். லஷ்மி நகர், கலைமகள் தெருவில் 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா, ஆலந்தூர் அப்பாவு தெருவில் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், சோழிங்கநல்லூரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 2 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா.
ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதிய வண்ணாரப் பேட்டை, புஜ்ஜம்மாள் தெருவில் உள்ள சலவைக் கூடத்தில் சலவையாளர்களுக்கு 2 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 46 ஓய்வறைகள், என மொத்தம் 189 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 12 திட்டப்பணிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
16 பேருக்கு பணி ஆணை
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 198 பணியாளர்களின் வாரிசுதாரர்கள், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் நகராட்சிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 214 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 61 பணியாளர்களின் வாரிசுதாரர்கள், என மொத்தம் 473 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், உதவி வரைவாளர், அலுவலக உதவியாளர், வார்டு உதவியாளர், பூங்கா பணியாளர், களப்பணியாளர் போன்ற பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 16 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பென்ஜமின், பாண்டிய ராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply