தற்போதைய செய்திகள்
stalin

சென்னை, ஜன. 10-

போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஒத்துழைக்க தயாராக உள்ளதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசியுள்ளார்.

தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

காணாமல் போன மீனவர்கள்

`ஓகி’ புயல் தாக்கியதில், கன்னியாகுமரி மாவட்டம் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை காணவில்லை என்ற அவலம் நீடிக்கிறது. ஆனால், அரசு காணாமல்போன மீனவர்களின் எண்ணிக்கையை தெளிவாக சொல்லவில்லை. ஆளுநர் உரையில் கூட, மீட்கப்பட வேண்டிய மீனவர்கள் எண்ணிக்கை இல்லை.

ஆளுநர் உரையில், காணாமல்போன கடைசி மீனவரை கண்டுபிடிக்கும் வரை மீட்புப்பணி தொடரும் என அரசு உறுதி கொண்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மத்திய பாதுகாப்பு அமைச்சர் மீனவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டு விட்டது என்று அறிவித்திருக்கிறார்.

நிவாரணம்

எத்தனை மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என்ற கணக்கு அரசிடம் இருக்கிறதா? `ஓகி’ புயல் பகுதிகளை மறுசீரமைப்பது, உடனடி நிவாரணம் 747 கோடி ரூபாய் மற்றும் நீண்டகால நிவாரணமாக 13,520 கோடி ரூபாய், பிரதமரிடம் கேட்டிருப்பதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால், ஆளுநர் உரையில் உடனடி நிவாரணத்திற்கு 401 கோடி ரூபாயும், நீண்டகால நிவாரணத்திற்கு 4854 கோடி ரூபாய் மட்டுமே மாநில அரசு கோரியிருக்கிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே, மத்திய அரசிடம் கேட்ட 13,520 கோடி ரூபாய் என்ன ஆயிற்று? ஆளுநர் உரையில் உடனடி நிதி ஏன் 401 கோடி ரூபாயாக குறைந்தது? பிரதமரிடம் கோரிய தொகையை ஆளுநர் உரையில் குறைத்துக் காட்ட வேண்டியது ஏன்?

காணாமல் போன மீனவர்களின் கணக்கு, உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை, மறு சீரமைப்பிற்கு நிதி கோருவது, தேசியப்பேரிடராக அறிவிக்க வலியுறுத்துவது, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள காலவரையறை என்ன என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.

தயார்

போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் இருந்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். ஊதிய உயர்வு ஒப்பந்தம், தொழிலாளர்களின் ஓய்வூதியம், வைப்பு நிதி குறித்த அரசின் நிலைப்பட்டை தெளிவுபடுத்த வேண்டும், தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த 7000 கோடி ரூபாயை உடனடியாக திருப்பித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளர்கள் அரசின் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூற முடியாது. எனவே, முதல்-அமைச்சரே தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான நிலை ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்து சுமூகமான முறையில் தீர்வு காண எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஒத்துழைப்பு தர நான் தயார். முதல்-அமைச்சர் அழைத்துப் பேசுவதற்கு உறுதி தந்தால், நானும் சுமூகமான வகையில் முடிவெடுக்க துணை நிற்கிறேன்.

களங்கம்

துணை முதலமைச்சர் போராட்டத்தை தூண்டியதே தி.மு.க. தொழிற்சங்கமும், மற்ற தொழிற்சங்கங்களும் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். தொழிற்சங்கங்களை, தொழிலாளர்களை அவமானப்படுத்தக் கூடிய வகையில், துணை முதல்-அமைச்சர் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

தொழிலாளர்களை போராட்டத்திற்கு தூண்டி விடுவதாக ஒரு களங்கத்தை, எங்கள் எம்.எல்.ஏ.க்கள் மீது முதல்-அமைச்சர் சொல்லலாமா என்று எங்கள் எம்.எல்.ஏ. கேட்கிறார். போராட்டத்தை தூண்டிவிடுவது என்பது எங்களை இழிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. எங்களை இழிவுபடுத்திப் பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Leave a Reply