27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காணொளி காட்சி மூலம், 27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, தி.மு.க. சார்பில் வார்டு வரையறை முறையாக நடத்தப்படவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டார். இதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும், இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.
வேட்புமனு தாக்கல்
இதையடுத்து, அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் இட ஒதுக்கீடு தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வுக்கு நேரடியாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து, முதல்நாளான நேற்று முன்தினம் மட்டும் 3,217 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இன்னும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யாத காரணத்தால், வேட்புமனுத்தாக்கல் இன்னும் பெரியளவில் சூடுபிடிக்கவில்லை.
மாநில தேர்தல்
ஆணையர் ஆலோசனை
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் நடைபெற 27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட ஆட்சியர்கள்) மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று சென்னை, மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் உள்ளாட்சித் தேர்தலை எப்படி பாதுகாப்பாக நடத்துவது, எந்தவித குழப்பங்களும் இல்லாமல் வாக்காளர்கள் வாக்களிக்க எப்படி உதவுவது, இளம் தலைமுறையினர் வாக்காளர்கள் வாக்களிக்க உதவுவது, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு, பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க செய்துதர வேண்டிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், கடலூர் மாவட்டம் நடுக்குப்பத்தில் ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாகவும் மாநில தேர்தல் ஆணையர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த உள்ளாட்சித் தேர்தல் முதல் வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *