BREAKING NEWS

26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் – தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்.

 

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று காலை சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களின் விவரம் பின்வருமாறு:

காவிரி நீர்

தமிழக நலன்களைப் புறக்கணிக்கும் பா.ஜ.க. அரசு, மதவெறிக்கு பச்சைக் கொடி காட்டி, பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரை தேச விரோதிகள் என்று சித்திரித்தும், கைது செய்யப்படுவதும், தலித் மற்றும் சிறுபான்மையினர் கொலை செய்யப்படுவதும் அரங்கேறி வருகிறது. கடந்த நான்காண்டுகளாக மக்கள் விரோத ஆட்சியை பா.ஜ.க. நடத்தி வருகிறது. பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த தேவையான திட்டங்களை வகுத்து அவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

மேட்டூர் அணை மூன்று முறை திறக்கப்பட்டும், காவிரி நீர் வீணாக கடலில் கலப்பது வேதனை. 47 நாட்களுக்கும் மேலாக காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லவில்லை. கடைமடைப் பகுதிகளுக்கு தாமதமின்றி காவிரி நீர் செல்லவும், வருங்காலத்தில் காவிரிநீர் கடலில் வீணாகக் கலப்பதைத் தடுக்கவும், அ.தி.மு.க. அரசு ஆக்கபூர்வமான செயல் திட்டங்களில் ஈடுபட வேண்டும்.

ஏழு பேர் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 26 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்திட, அ.தி.மு.க. அமைச்சரவை, தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அந்தத் தீர்மானத்தின் மீது, உடனடி நடவடிக்கை எடுத்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில், நாளை நடைபெறும் பாரத் பந்திற்கு ஆதரவளிப்பதாக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த பந்த் முழுமையான வெற்றி பெற்றிட மாவட்டச் செயலாளர்கள் ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும்.

குட்கா ஊழல்

குட்கா ஊழல் வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து டிஸ்மிஸ் செய்தும், டி.ஜி.பி. ராஜேந்திரனை உடனடியாக பதவியிலிருந்து விடுவித்தும் உத்தரவிட்டு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்க வேண்டும். ஆளுநரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்

18-ந் தேதி ஆர்ப்பாட்டம் (பாக்ஸ்)

வருமானவரித் துறை ஆய்வின் மூலம்தமிழக அமைச்சர்களின் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வரும் 18ந் தேதி தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியல்

சரிபார்ப்பு முகாம்(பாக்ஸ்)

தி.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் பெயர் மாற்றுதல் தொடர்பான படிவம் அடுத்த மாதம் 01ந் தேதி முதல் அக்டோபர் 31ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

பின்னர், வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்வது அடுத்த மாதம் 08-ந் தேதி, 22-ந் தேதி, அக்டோபர் 13-ந் தேதியில் நடைபெற உள்ளது. மேலும், சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் 9-ந் தேதி, 23-ந் தேதி, அக்டோபர் 7-ந் தேதி மற்றும் 14ந் தேதி நடைபெறுகிறது.




Leave a Reply