BREAKING NEWS

2025-ல் இங்கிலாந்தை இந்தியா முந்திவிடும் பொருளாதார நிபுணர்கள் கருத்து விமான போக்குவரத்தில்

 

 

 

இந்தியா, விமான போக்குவரத்தில் 2025-ம் ஆண்டுக்குள் இங்கிலாந்தை முந்திவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எளிமையான விதிமுறைகள்

விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இற்காக விசா பெறுவது உள்ளிட்ட பல விதிமுறைகளை எளிமைப்படுத்தி வருகிறது.

இரண்டாம் நிலை விமான நிலையம்

விமான பயணிகளை ஈர்க்கும் வகையில், பல்வேறு தனியார் விமான நிறுவனங்கள் குறைந்த கட்டணங்களை நிர்ணயித்து, பயணிப்போரின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை என்று பெருநகரங்கள் மட்டுமல்லாமல், கோவை, சூரத், ஆமதாபாத், ராஞ்சி, பாட்னா, அமிருதசரஸ் என இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்து பயணிப்போர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.

அதாவது, இந்தியாவில் உள்ள 25 இரண்டாம் நிலை நகரங்களில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை ஓராண்டில் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், புது தில்லியில் 14.5 சதவிகிதமும், மும்பையில் 6.5 சதவிகித வளர்ச்சியுமே காணப்பட்டுள்ளது.

கட்டணம் குறைவு

2017-18-ம் நிதியாண்டில், விமானங்களில் பயணைி எண்ணிக்கை சுமார் 30.8 கோடி. அதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் பயணித்தோரின் எண்ணிக்கை சுமார் 26.5 கோடி. மேற்கூறிய ஓராண்டில், ராஞ்சி மற்றும் அமிருதசரஸ் விமான நிலையங்களில் இருந்து பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக, முறையே, 72 சதவீதம் மற்றும் 64 சதவீதம் அதிகரித்துள்ளது.

சிறிய விமான நிலையங்களிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மக்களின் விமானங்களின் பயணம் செய்யும் அளவுக்கு அவர்களது வசதி பெருகியுள்ளது. அவர்களைக் கவர கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன என விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயணிகள் அதிகரிப்பு

உடான் போன்ற திட்டங்கள் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று சுற்றுலா முகவர் நிறுவனங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. சில வழித்தடங்களில் ரயில் கட்டணங்களுக்கு இணையாக விமானக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதுவும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக அமைகிறது.

இந்தநிலையில், குறைந்த கட்டணம், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, கூடுதல் சேவை ஆகிய காரணங்களால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 48 கோடியாக அதிகரிக்கும் என்றும், இது ஜப்பானில் விமானங்களில் பயணம் செய்பவர்களைவிட அதிகம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

3-ஆவது பெரிய நாடு

2016-17 நிதியாண்டில், முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 7.39 சதவிகிதமும், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 11.86 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்து சந்தையின் மேம்பாட்டுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. உலக அளவில் விமானப் போக்குவரத்தில் 3-ஆவது பெரிய நாடாக விளங்கும் இந்தியா, 2025-ல் இங்கிலாந்தை முந்திவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




Leave a Reply