BREAKING NEWS

2014-ம் ஆண்டு தேர்தலை விட 2019-ல் 20 தொகுதிகளில் நோட்டா வாக்குகள் அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை விட, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் நோட்டாவில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

நோட்டா பயன்பாடு

சமீபகாலமாக மக்கள் ஓட்டு போட வருவதே குறைந்து வருகிறது. ‘போட்டியிடும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை. அதனால், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்று கூறும் போக்கு அதிகரித்தது.

இந்நிலையில், இவர்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வழிவகுக்கும் விதமாக, ‘நோட்டா’ (NOTA – None of the above) முறையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2013-ம்ஆண்டு அறிமுகப்படுத்தியது. பின்னர் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பரவலாக நோட்டா பயன்பாட்டுக்கு வந்தது.

நோட்டாவுக்கு இளைஞர்கள் வரவேற்பு

அதன்படி, ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் மொத்தம் உள்ள 16 பட்டன்களில் கடைசி பட்டன் நோட்டாவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ‘மேற்காணும் நபர்களில் எவருமில்லை’ என குறிப்பிடப்பட்டிருக்கும். எந்த வேட்பாளரும் நமக்கு பிடிக்காத பட்சத்தில் தங்கள் வாக்குகளை நோட்டாவில் பதிவு செய்யலாம்.

இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சில நேரங்களில் ஒருசில முக்கிய கட்சி வேட்பாளர்களை விட நோட்டாவுக்கு விழும் வாக்குகள் அதிகமாகி, இந்த நோட்டா விமர்சனத்துக்குள்ளானது.

நோட்டாவுக்கு பதிவான வாக்கு

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் அதிகபட்சமாக, நீலகிரி தொகுதியில் 46 ஆயிரத்து 559 வாக்குகள் நோட்டாவில் பதிவாகி இருந்தன. மேலும், 6 தொகுதிகளில் 20 ஆயிரத்துக்கு மேலும், 27 தொகுதிகளில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், 5 தொகுதிகளில் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலும் நோட்டாவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தன.

தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரம் வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளன. கிருஷ்ணகிரி தொகுதியில், நோட்டாவுக்கு 19,825 வாக்குகள் பதிவாகி, நோட்டா 4-வது இடத்தை பிடித்துள்ளது.

வாக்கு சதவீதம் அதிகரிப்பு

கடந்த தேர்தலைவிட இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 38 தொகுதிகளில், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை, விருதுநகர், சிதம்பரம், உள்ளிட்ட 20 தொகுதிகளில் நோட்டாவில் பதிவாகும் வாக்குகள் அதிகரித்துள்ளன.

இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை படித்த நபர்களை வேட்பாளர்களாக நிறுத்தியும் அவர்கள் ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்த நிலையிலும், அவர்களை தவிர்த்து நோட்டாவுக்கு வாக்களித்திருப்பது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.




Leave a Reply