BREAKING NEWS

20 ஆயிரம் காவலர்கள் ரத்த தானம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.


 

தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் காவலர்கள் ரத்த தானம் செய்தனர். சென்னையில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடனிருந்தார். மாநிலம் முழுவதும் இந்த ரத்த தான முகாம் 89 இடங்களில் நடந்தது.

ரத்த தான முகாம்

இந்த முகாம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரத்த தானம் உயிர்நாடி என்பதால், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில் காவல் துறையினர் சார்பில் இந்த ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்து உள்ளனர்.

இந்த ரத்த தான முகாமில் கலந்து கொண்டு, ரத்த தானம் செய்பவர்களுக்கு அரசின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

கடந்த 26ந் தேதி, டெல்லியில் பாஸ்போர்ட் சேவா திவாஸ் விழா நடந்தது. இந்த விழாவில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை உடனடியாக சரிபார்க்கும் வகையில், ‘எம். போலீஸ் அப்’ செயலியை தமிழக போலீசார் உருவாக்கி இருந்தனர்.

முதல்வர் பாராட்டு

இந்த செயலியை பாராட்டு வெளியுறவுத் துறை அமைச்சரால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த பாராட்டு சான்றிதழை காவல் துறை கூடுதல் இயக்குனர் (தொழிற்நுட்பம்) எம்.என்., மஞ்சுநாதா முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்த முகாமில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டி.ஜி.பி., டி.கே. ராஜேந்திரன் அமைச்சர்கள், எம்.எல்,ஏ.க்கள், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள்மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமை செயலர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) விஜயகுமார், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன், காவல் துறை கூடுதல் இயக்குனர் (பயிற்சி) ஆர்.சி. குடவாலா, காவல் துறை கூடுதல் இயக்குனர் (ஆயுதப்படை) முகம்மது ஷகில் அக்தர், மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரத்த தேவை

தமிழகத்தில் முழுவதும் இந்த ரத்த தான முகாமில் 20 ஆயிரம் போலீசார் கலந்து கொண்டனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. இதில் 4 லட்சம் யூனிட் ரத்தம் அரசு ரத்த வங்கிகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மீதமுள்ள ரத்தம் தனியார் மருத்துவமனைகளில் சேகரிக்கப்படுகிறது. பொதுவாக மே மாதங்களில் கல்லூரி விடுமுறை உள்ளிட்ட காரணங்களால், ஜூன் மாதத்தில் ரத்த தேவை அதிகம் இருக்கும். இதனை கருத்தில் கொண்டு ஜூன் மாதத்தில் ரத்தம் சேகரிக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நோக்கமாகும் என்று போலீசார் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது நினைவுக் கூரத்தக்கது.

—–

படவிளக்கம்

சென்னை எழும்பூர் ராஜரெத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்த ரத்த தான முகாமை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அருகில் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளனர்.




Leave a Reply