தற்போதைய செய்திகள்
raja-kanimozhi34455-21-1513833852

2 ஜி, வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு….

புதுடெல்லி,
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கனிமொழி, ஆ.ராசா

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ரூ.30 ஆயிரத்து 984 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ குற்றச்சாட்டு கூறியது.

இதன் அடிப்படையில் திமுக எம்பி கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 17 மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இந்த ஒதுக்கீடுகள் அனைத்தையும் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம்தேதி ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கலைஞர் தொலைக்காட்சிக்கு

மேலும் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கப்பிரிவு வழக்குத் தொடர்ந்தது.

திமுக எம்பி. கனிமொழி, ஆ.ராசா, சாஹித் பல்வா, வினோத் கோயங்கா, ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால், கரீம் மோரானி, அமிர்தம், கலைஞர் தொலைக்காட்சி இயக்குநர் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

அனைவரும் விடுதலை

இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த 2011ம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணை நடந்துவந்தது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சந்தேகத்துக்கு இடமின்றி ஆதாரங்களை நிரூபிக்க சிபிஐ, அமலாக்கப்பிரிவு ஆகியவை தவறிவிட்டதாகக் கூறி குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் நீதிபதி சைனி விடுவித்தார்.

மேல் முறையீடு

இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு சார்பில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது.
இது போல் சி.பி.ஐ.,யும் மேல்முறையீடு வழக்கு தொடர ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply