BREAKING NEWS

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதியை நியமித்தது உச்ச நீதிமன்றம் –  விரைவாக தீர்ப்பு வழங்க உத்தரவு.


 

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3-வது நீதிபதியாக சத்தியநாராயணாவை பரிந்துரை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தகுதி நீக்கம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி அ.தி.மு.க.வின் 18 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். ஆனால், 18 எம்.எல்.ஏ.க்களையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு வழங்கியது. சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கியது செல்லும் என்று அவர் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள்.

புதிய மனு

இதனால் வழக்கில் 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டு, 3-வது நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார். இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தங்கச் தமிழ்செல்வன் நீங்களாக 17 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25-ந் தேதி புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகினார். அந்த மனுவில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டால் உரிய நீதி கிடைக்காது என்றும், உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கினை மாற்றக் கோரியும் தெரிவிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள்

மேலும் 3-வது நீதிபதி வழக்கை விசாரிப்பது குறித்து வாட்ஸ் அப்பில் பல்வேறு தகவல்கள் வருவதால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். எங்கள் தொகுதி நீண்ட நாட்களாக எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் இருக்கிறது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 6 மாதங்களுக்கு மேல் காலியாக இருக்கக்கூடாது எனக் கோரி இருந்தனர்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தனர். இதையடுத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் ஆகியோர் முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசியலமைப்பு

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ‘‘18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி மாதம் முடிந்தநிலையில் அதற்குத் தீர்ப்பு நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மக்கள் பிரதிநித்துவச் சட்டப்படி ஒரு தொகுதி 6 மாதங்களுக்கு மேல் சட்டப்பேரவை உறுப்பினர் இல்லாமல் காலியாக இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதாகும்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கில் 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை., 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மீது பல்வேறு புகார்கள் உள்ளன’’ எனத் தெரிவித்தனர்.

குற்றச்சாட்டு

இதைக் கேட்ட நீதிபதிகள், விசாரணை முடிந்தவுடன் தீர்ப்புகள் வழங்க நீதிபதிகள் ஒன்றும் கம்ப்யூட்டர் இல்லை. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலேயே நடக்கும். நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினார்கள்.

இதை ஏற்றுக்கொண்ட மனுதாரர்கள் நீதிபதி மீதான குற்றச்சாட்டை நாங்கள் திரும்பப் பெறுகிறோம். ஆனால், 3-வது நீதிபதியாக வேறு ஒருவரை உச்ச நீதிமன்றம் நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி சத்தியநாராயணாவை பரிந்துரை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை விசாரித்துத் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.




Leave a Reply