BREAKING NEWS

135 சைபர் குற்றங்களில் தொடர்புடைய 27 வயது இளைஞர் கைது


 

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை திருடி பலரை ஏமாற்றிய 27 வயது இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளது.

சைபர் குற்றங்கள்

புதுடெல்லியில் பெண் ஒருவரின் கிரெடிட் கார்டு தகவல்களை திருடி ரூ. 50 ஆயிரத்தை ஏமாற்றியது தொடர்பாக விகாஸ் ஜா என்ற வாலிபரை போலீசார் கடந்த பிப்ரவரியில் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த விகாஸ் தொடர்ந்து சைபர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்.

புதுடெல்லி பகுதியில் பலரது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் தகவல்களை திருடி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

135 வழக்குகள்

135 வழக்குகள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான வழக்குகளில் சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. பல்வேறு வழக்குகளில் விகாஸ்க்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

போலீஸ் சோதனை நடத்திய போது விகாஸிடம் இருந்து லேப்டாப், செல்போன்கள், ஒரு டெபிட் கார்டு, சிம் கார்டுகள் மற்றும் ரூ. 17.70 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளது.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் ஆனந்த் குமார் கூறியதாவது, “எங்களுக்கு இப்பகுதியை சேர்ந்த மக்களிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்துள்ளது, தொடர்ந்து கண்காணித்ததில் விகாஸை கைது செய்துள்ளோம்,” என கூறியுள்ளார்.

ஆடம்பர வாழ்க்கை

மோசடி செய்து கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என தெரியவந்துள்ளது. அதிகமான பணத்தை பயணத்திற்கும், இரவு விடுதிகளுக்கும் செலவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் இ-மெயில் ஐடியை ஹேக் செய்து அதன்மூலம் பெறப்படும் தகவல்கள் மூலம் வங்கி கணக்குகளில் கைவரிசையை காட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் பரிசுதொகை என ஆசைவார்த்தை கூறி மொபைலில் தகவல் அனுப்பி, அவர்களுடைய இ-மெயில் ஐடியை பெற்றுள்ளார்.

வங்கி கணக்கு மாற்றம்

பின்னர் அதனை ஹேக் செய்து வங்கி கணக்கில் மொபைல் எண்ணையும் மாற்றியுள்ளார். இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஒ.டி.பி. செல்லாது. மோசடியின் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை தன்னுடைய கணக்கிற்கு மாற்றியுள்ளார். ஒ.டி.பி. வங்கியிலிருந்து வராத காரணத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக அறிந்துக்கொள்ள முடியாது.

வாடிக்கையாளர்கள் வங்கியை நாடும்போதுதான் அவர்களுடைய கணக்கில் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள விகாஸ் ஜா பீகார் மாநிலம் முசாப்பர்பூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. போலீஸ் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.




Leave a Reply