தற்போதைய செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 16-ந் தேதி வெளியாகிறது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 16-ந் தேதி வெளியாகிறது
அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகம் தகவல்
ஊடகங்கள் தெரிந்துகொள்ள புதிய முறை அறிமுகம்
சென்னை

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஊடகங்கள் தெரிந்துகொள்ள புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவு தேதிகள்

பள்ளிக்கல்வித்துறையில் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கடந்தாண்டு வரை, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியானது விடைத்தாள் திருத்திய பிறகு முடிவு செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு தேர்வுகள் முடிந்த பிறகு அதன் முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 23-ந் தேதியும், பிளஸ் வகுப்பு தேர்வு முடிவுகள் 29-ந் தேதியும் மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு வரும் 16-ந் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வரும் 16-ந் தேதி வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

புதிய நடைமுறை

இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16-ந் தேதி காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியீடப்படும் என தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் வரும் 16-ந் தேதி அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இந்த தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையினை ஊடகவியாளர்கள் www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய நடைமுறையினை தேர்வுத்துறை அறிமுகப்படுத்துகிறது. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்விற்கும் இதே நடைமுறை பின்பற்றப்படுமெனவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 
Leave a Reply