BREAKING NEWS

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும் – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.


 

ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக கைவிடாவிட்டால், பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஹைட்ரோகார்பன்

காவிரி டெல்டா பகுதிகளில் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே, புதுக்கோட்டையில், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, மக்கள் ஏகோபித்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கூறி ஏமாற்றி வந்த மத்திய அரசு, இப்போது திடீரென மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியிருப்பது, தமிழக வேளாண்மை முன்னேற்றம் பற்றியோ, தமிழக விவசாயிகளின் பாதுகாப்பு பற்றியோ மத்திய அரசு துளியும் கவலைப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்திற்கு, மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு இடம் ஒதுக்கியிருப்பது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை அடக்குவதில், அரச பயங்கரவாதத்தை மக்கள் மீது இரண்டு அரசுகளும் இணைந்து கட்டவிழ்த்து விட்டது உண்மையாகியிருக்கிறது.

நிலங்கள், குடிநீர் ஆதாரங்கள், விவசாயிகள் நலன், அப்பகுதி மக்களின் சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து என்று வாழ்வாதாரத்திற்கும், உயிருக்கும் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. எனவே, வெகுமக்கள் விரோத திட்டங்களைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிவரும் மத்திய அரசு, தமிழக மக்களின் பெருந்திரள் போராட்டத்தையும் அடங்கா சினத்தையும் சந்திக்க வேண்டிய கட்டாயமான நிலை உருவாகும்.

கைவிட வேண்டும்

எனவே, தமிழகத்தின் நெற்களஞ்சியத்தினை காப்பாற்றுவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு கருதியும் இத்திட்டத்தினை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதை நினைவுபடுத்தி, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையை மத்திய அரசுக்கு தமிழக அரசு வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply