BREAKING NEWS

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ரூ.11,359 கோடி செலவில் 11 மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு.


தமிழகத்தில் சென்னை மாநகராட்சி உட்பட 11 மாநகராட்சிகளில் 11,359 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்பாடுகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 11 மாநகராட்சிகளில் செயல்படுத்தி வரும் சீர்மிகு நகர திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நேற்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய கூட்டரங்கில் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்தியா முழுவதும் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து, அதனை சீர்மிகு நகரங்களாக உருவாக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த முனைந்த நேரத்தில், ஜெயலலிதா எடுத்த சீரிய முயற்சியின் காரணமாக, தமிழகத்தில் சென்னை, கோயம்புத்துார், மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலுார், திருப்பூர், துாத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு ஆகிய 11 நகரங்கள், சீர்மிகு நகரங்களாக உருப்பெற தேர்ந்தெடுக்கப்பட்டன. மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டிக்கும் 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. மத்திய அரசிற்கு இணையாக, தமிழக அரசும், 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குகிறது.

தேர்வு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு முதலாவது சுற்றில் 2015-16-ம் ஆண்டில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் கோயம்பத்துார் மாநகராட்சிகளும், 2-வது சுற்றில், 2016-17-ம் ஆண்டில், மதுரை, சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலுார் மாநகராட்சிகளும், 3-ம் சுற்றில், 2017-18ம் ஆண்டில், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாநகராட்சிகளும், 4ம் சுற்றில் 2017-18ம் ஆண்டில், ஈரோடு மாநகராட்சியும் தேர்வு செய்யப்பட்டன.

250 திட்டங்கள்

தமிழகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ஸ்மார்ட் சிட்டிகளில், மொத்தம் ரூ.11,359 கோடி (பதினோராயிரத்து முன்னூற்று ஐம்பத்து ஒன்பது கோடி) மதிப்பீட்டில் 250 திட்டங்கள் மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட 250 திட்டங்களில், 13 திட்டங்கள், ரூ.15.78 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. 33 திட்டங்களுக்கு ரூ.846.08 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 33 திட்டங்களுக்கு ரூ.954.31 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

விரைவில் ஒப்பந்தம்

33 திட்டங்களுக்கு, ரூ.1450.48 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்பட உள்ளது. 138 திட்டங்களுக்கு, ரூ.8093.05 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாநகராட்சி வாரியாக சீர்மிகு நகராங்கள் திட்ட செயல்பாட்டினை விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகள் பங்கேற்பு

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் உறர்மந்தர் சிங், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி. பிரகாஷ், பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிச்சாமி, நகராட்சி நிர்வாக இணை ஆணையர் கலைச்செல்வி மோகன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

——

தரத்தினை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்(பாக்ஸ்)

—–

சென்னை பெருநகர குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டிகளுக்கான திட்ட பணிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:

ஸ்மார்ட் சிட்டிகளுக்கான திட்டங்கள் அனைத்தும் முன்னேற்ற நிலையில் உள்ளன. ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் நிலையில் உள்ள அனைத்து திட்டங்களும் 2018 ஜூலை 31-ந் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட உள்ளது. நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை விரைந்து முடித்து 2018 ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும். குடிநீர், பாதாள சாக்கடை, சாலைகள் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதித் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கான பணிகள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின் ஆய்வு முடிக்கப்பட்டுவிட்டன. நாளை(22-ந் தேதி) 5 மாநகராட்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து திட்டங்களையும் உயர் அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்து திட்டங்களின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.




Leave a Reply