BREAKING NEWS

ஸ்மார்ட் சிட்டி டெண்டர்களை விசாரணை நடத்த வேண்டும் –  மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.


 

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர்களை விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்மார்ட் சிட்டி

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின், பத்து ஸ்மார்ட் சிட்டிகளின் மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப் உள்ளிட்ட டெண்டரில், அந்த வேலைக்குத் தொடர்பே இல்லாத மெட்டல் ஷீட் தயாரிக்கும் நிறுவனத்தைப் பங்கேற்க வைத்து, அந்த டெண்டரை குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும் என்று செயல்படுவது மட்டுமின்றி, ஊழல் செய்திகளை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவது கருத்துச் சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து.

எப்படி, ஏன்?

இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்ற `ஏஸ்டெக் மெஷினரி காம்பொனென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனி’ இதுவரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் எதையும் செய்த முன் அனுபவம் இல்லை. அந்த நிறுவனத்தின் இணையதளத்தில், இயந்திரங்கள் தயாரிப்பது தான் எங்களது முக்கியமான தொழில் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அனுபவமே இல்லாத இந்த நிறுவனத்துக்கு, ஸ்மார்ட் சிட்டி மின்னணு நிர்வாகம் தொடர்பான 149 கோடி ரூபாய் ஒப்பந்தம் ஏற்கனவே எப்படி வழங்கப்பட்டது?

மேலும், இந்த நிறுவனம் ஏன் ஒப்பந்தத்தை டெண்டர் கமிட்டி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோருகிறது? இந்த தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக முடிவு எடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் தான், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் டுபிட்கோவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைதி ஏன்?

கோவையைச் சேர்ந்த தனியார் கம்பெனிக்கு `ஸ்மார்ட் சிட்டி பணிகளை’ கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஒப்பந்தத்தில் இவ்வளவு குளறுபடிகளை அமைச்சர் நடத்துகிறார். உள்ளாட்சித் துறை அனைத்தும் அமைச்சர் வேலுமணிக்கே சொந்தமான தனியார் நிறுவனம் போல் மாற்றப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் சிட்டியைப் பொறுத்தமட்டில் மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 50 சதவீதமும் நிதி செலவழிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர்களில் நடைபெறும் முறைகேடுகளை மத்திய அரசு ஏன் தட்டிக் கேட்காமல் இருக்கிறது? இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் அமைதி காப்பது ஏன்? இத்திட்டத்தை கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம், தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர்களில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

சி.பி.ஐ. விசாரணை

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில், டுபிட்கோ ஸ்மார்ட் சிட்டி டெண்டர் மட்டுமின்றி, அமைச்சர் வேலுமணியின் கட்டுப்பாட்டில் உள்ள துறையில் இதுவரை விடப்பட்டுள்ள அனைத்து டெண்டர்களையும் விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும். மத்திய அரசு நிதியும் இதில் இருப்பதால், தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply