BREAKING NEWS

ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமாக வெடித்தது. துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி.

துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி

அமைதிகாக்கும்படி, தூத்துக்குடி மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமாக வெடித்தது (பாக்ஸ்) ஆட்சியர் அலுவலகத்தை சூறையாடிய பொதுமக்கள்(பாக்ஸ்) போலீசார் மீது கல்வீச்சு தடியடி; கண்ணீர்புகை வீச்சு
தூத்துக்குடி, மே22-

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் பெண்கள். இந்த கலவரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானில் ஸ்டெர்லைட் என்னும் ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலை அமைந்து உள்ளது. இங்கு செம்பு கம்பி, கந்தக அமிலம், பாஸ்பரிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலைக்கு 1993ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே வசிக்கும் பொதுமக்கள் கொடிய நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்ற புகார்கள் எழுந்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் அவ்வப்போது போராடினர்.

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் நேற்று 100வது நாளை எட்டியது. இதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்திருந்தனர். அதற்கு ‘‘லட்சம் பேர் கூடுவோம், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம்’’ என்று பெயரிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், ஏராளமான காவல்துறையின் தடுப்புகளையும் தாண்டி ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று காலை 9 மணியளவில் முற்றுகையிட்டனர். குறிப்பாக தூத்துக்குடி பனிமயமாதா கோவிலில் இருந்து அதிகம் பேர் ஊர்வலமாக வந்தனர்.

போலீஸ் தடியடி

அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடாத வண்ணம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறினர்.

அப்போது போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து சென்றுக் கொண்டே இருந்தனர். இதனால் போராட்டத்தை கலைக்க, போலீசார் லேசான தடியடி நடத்தினர். எனினும் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை. வன்முறையாக வெடித்தது.

துப்பாக்கிச் சூடு

இதையடுத்து போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவி உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் முதலில் 2 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பின்னர் உயிரிழப்பு 10 ஆக அதிகரித்தது. உயிரிழந்த 10 பேரில் 3 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் என்பதும், மற்றொருவர் லூர்தமாள்புரம் கிளாஸ்டின் என்பதும் தெரிய வந்துள்ளது.

மாணவி பலி

ெரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த வெனிஸ்டா என்ற பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலியாகியுள்ளார். இவர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

தீ வைப்பு

காவல்துறையின் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் பெண்கள் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியும், தடியடி தடத்தியும் அவர்கள் கலைய மறுத்துவிட்டனர்.

இந்த வன்முறையில் இரண்டு போலிஸ் ஜீப்களுக்கு தீ வைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறையின் தடியடியால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வாகனங்களுக்கும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்கும் தீ வைத்தனர்.

போலீஸ் குவிப்பு

தூத்துக்குடியில் நிலைமையைக் கட்டுக்குள் வைக்க மதுரை மற்றும் மணிமுத்தாறு பகுதிகளில் இருந்து கூடுதல் காவல்துறை படைகள் வரவழைக்கப்பட்டன. சுமார் 12.50 மணியளவில், போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்பகுதியே வன்முறைக் களமானது.

சமூக வலைத்தளங்கள் மூலமாக, போராட்டம் குறித்து தகவல் பரவி, ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் திரண்டதால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனதாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்ஏவி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தடையை மீறி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

பதற்றம்- காவல் துறை விளக்கம்

காவல்துறை எதிர்பாராத வகையில், மடத்தூர், பனிமயமாதா தேவாலயம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஒன்றுதிரண்ட பக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நாலா திசைகளில் இருந்தும் திரண்டு வந்தனர். இதனால் தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றமாக காணப்பட்டது.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி., மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தடையை மீறி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக காவல்துறை கூறப்படுகிறது.

காவல்துறை எதிர்பாராத வகையில், மடத்தூர், பனிமயமாதா தேவாலயம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஒன்றுதிரண்ட பக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நாலா திசைகளில் இருந்தும் திரண்டு வந்தனர். இதனால் போலீசாரால் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்ைல என்று போலீசார் கூறி உள்ளனர்.

தமிழக அரசு வேண்டுகோள்

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் வன்முறையை கைவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

இதனை ஏற்று மக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

—–




Leave a Reply