BREAKING NEWS

ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமானது, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைப்பு.

ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமானது, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைப்பு.

தூத்துக்குடி, மே24-

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தீ வைத்தனர்.

முற்றுகை போராட்டம்

தூத்துக்குடியில் மடத்தூர் பகுதியில் இருந்து வந்தவர்களும், பனிமயமாதா ஆலயம் பகுதியில் இருந்து வந்தவர்களும் வி.வி.டி. சிக்னல் அருகே குவிந்த போது போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்தனர்.

இந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் போலீசார் சிதறி ஓடினர்.

போராட்டக்காரர்கள் போலீசாரை விரட்டியதால், மற்றொரு பகுதியில் இருந்து வந்த போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் பீதியடைந்த போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். அவர்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ் வாகனங்களை கல்வீசி சேதப்படுத்தினர். தொடர்ந்து கீழே கவிழ்த்தனர்.

கலவரம் வெடித்தது

இதனால் தூத்துக்குடி நகரமே கலவர பூமியாக காட்சியளித்தது. பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. எனினும் திட்டமிட்டப்படி போராட்டக்காரர்கள் பல்வேறு சாலைகளில் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணி அணியாக முற்றுகை போராட்டத்திற்கு சென்றனர்.

போலீசாரின் தடுப்பை மீறி போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார் வஜ்ரா வாகனத்தை கொண்டு கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினார்கள். இதையடுத்து போராட்டக்காரர்கள் வஜ்ரா வாகனத்தையும் துரத்திக் கொண்டு ஓடினார்கள். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெருங்க விடாமல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தீ வைப்பு

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பைபாஸ் மேம்பாலத்தில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் அவர்கள் தீ வைத்து எரித்தனர். பிறகு அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் டயர்களை கொழுத்தி உள்ளே வீசினார்கள். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளேயும் தீப்பற்றி எரிந்தது.

—–




Leave a Reply