தற்போதைய செய்திகள்

`ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க எதிர்ப்பு விவகாரம்’ மக்களின் விருப்பத்துக்கு எதிராக எந்தவொரு திட்டமும் நிறைவேற்றப்படாது அமைச்சர் ஜெயக்குமார் உறுதி….

சென்னை,

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க எதிர்ப்பு விவகாரத்தில், தமிழகத்தில் மக்களின் விருப்பத்துக்கு எதிராக எந்தவொரு திட்டமும் நிறைவேற்றப்படமாட்டாது என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:-

மக்களின் கருத்து அவசியம்

நியூட்ரினோ திட்டம் மட்டுமின்றி மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்தவொரு திட்டமும் தமிழகத்தில் நிறைவேற்றப்படாது. எந்தவொரு திட்டத்திற்கும் மக்களின் கருத்து மிகவும் அவசியம். இது மக்களின் அரசு. ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பொறுத்தவரை அம்மாவட்ட மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரே அந்த ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார்.

தி.மு.க.வாலே பிரச்சினை

ஸ்டெர்லைட் ஆலைக்கு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், அதற்கு திறப்பு விழா நடத்தப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தான். பல ஆண்டுகள் ஆட்சியிலிருந்துவிட்டு இப்போது பல பிரச்சனைகளுக்கும் காரணம் அ.தி.மு.க.தான் என்ற மாயத் தோற்றத்தை தி.மு.க. உருவாக்குகிறது.

சசிகலா குடும்பத்தினர் அனைவருமே மோசடியில் ஈடுபடுபவர்கள். விவேக் ஜெயராமன் எல்.எல்.பி. படிப்புக்காக என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தது நிரூபணமானால் அவர் சிறை செல்ல வேண்டும். வறட்சி, வெள்ளம் என எல்லா பேரிடர்களையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது.

என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம்

அமைக்கும் வரை ஓயமாட்டோம்
அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குப்படுத்தும் குழு அமைக்கும் வரை தமிழக அரசு ஓயாது. உச்சநீதிமன்றம் அளித்த கெடு வரும் 29-ம் தேதி வரை உள்ளது. அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம். அதன்பிறகு தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்றார்.




Leave a Reply