தற்போதைய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…..

சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போராட்டத்துக்கு ஆதரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் கடும் அபாயத்தை சந்தித்துக் கொண்டிருப்பதை அரசுக்கு எச்சரிக்கும் வகையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்துக்கு தி.மு.க.வின் ஆதரவினைத் தெரிவிக்கிறேன். ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் பேராபத்துகளை, உடனடியாக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

உயிர்ப்பலி தொடர்கிறது

ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் தாமிரபரணி ஆறும், விளைநிலங்களும் பாழ்பட்டுவதோடு, புற்றுநோய், தோல்நோய்கள் உள்ளிட்ட அபாயகரமான நோய்களை உருவாக்கி வருகிறது. இந்த ஆலையினால் நிலத்தடி நீரில் தாமிரம், ஆர்சனிக், புளோரைடு, குரோம் உள்ளிட்ட நச்சுப்பாதிப்புகள் கலந்துள்ளன. இதனால், மக்களின் உயிர்ப்பலி தொடர்கிறது.

நிரந்தரமாக மூட வேண்டும்

நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டுத்துறை, உரிய முறையில் செயல்படாததால், மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட பலரும் புற்றுநோய்க்குள்ளாகி, உயிருக்குப் போராடும் கொடூரம் தொடர்கிறது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்துவதுடன், தற்போது செயல்படும் ஆலையின் விதிமீறல்கள் மீது உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ந்து ஆபத்து நீடிக்குமானால், அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply