BREAKING NEWS

வேலூர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீஸ்-துணை ராணுவ வீரர்கள் :

வேலூர் தொகுதியில் மக்கள் ஆர்வத்துடன் நேற்று வாக்களித்தனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 52 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது.

வேலூர் தேர்தல்

தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனுக்கு நெருக்கமானவரது வீட்டில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதாலும், அந்த பணக்கட்டுகளின் மேல் எந்தெந்த வார்டு, பூத் என்று குறிப்பிடப்பட்டு இருந்த காரணத்தாலும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கான தேர்தல் வரும் 5-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, ஏற்கனவே களமிறங்கிய தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோர் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதையடுத்து, தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவு

இந்த தேர்தலை கண்காணிக்க பொது பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி காதே சுதம் பண்டரிநாத், சிறப்பு செலவின பார்வையாளராக ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி முரளிகுமார், தேர்தல் செலவின பார்வையாளர்களாக வினய்குமார்சிங், ஆர்.ஆர்.என்.சுக்லா, போலீஸ் பார்வையாளராக ஐ.பி.எஸ். அதிகாரி ஆதித்யகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் வேலூர் தொகுதியில் தங்கி இருந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை 7 மணியில் திட்டமிட்டபடி வேலூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது. 14 லட்சத்து 32,555 வாக்காளர்கள் அடங்கிய இந்த தொகுதியில் மொத்தம் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. காலை முதலே வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட 12 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்காளர்கள் வாக்களித்தனர்.

வேட்பாளர்கள் வாக்களிப்பு

அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சத்துவாச்சாரியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். இதேபோல, கதிர் ஆனந்த், தீபலட்சுமி ஆகிய வேட்பாளர்களும் தங்களது வாக்கை பதிவு செய்தார்.வேலூர் தொகுதியில் லோக்சபா தேர்தலில் அல்லாபுரம் வாக்குச்சாவடியில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தனது வாக்கை பதிவு செய்தார். பூத் ஸ்லிப் அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

காலை 9 மணி நிலவரப்படி, 7.40 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய இந்த தொகுதியில், வேலூரில் 8.75 சதவீதம், அணைக்கட்டில் 6.1 சதவீதம், கே.வி.குப்பத்தில் 8.85 சதவீதம், குடியாத்தத்தில் 6.79 சதவீதம், வாணியம்பாடியில் 6.29 சதவீதம், ஆம்பூரில் 7.67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, 11 மணி நிலவரப்படி 14.61 சதவீதம் வாக்குகள் பதிவானது. 1 மணி நிலவரப்படி வேலூரில் 24.73 சதவீதம், அணைக்கட்டு 27.14 சதவீதம், கே.வி.குப்பம் 30.75 சதவீதம், குடியாத்தம் 32.43 சதவீதம், வாணியம்பாடி 30.21 சதவீதம், ஆம்பூர் 31.48 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

52 சதவீதம்

இதையடுத்து, 28 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி வேலூர் லோக்சபா தொகுதியில் 52.32 சதவீதம் சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன்படி, வேலூரில் 54.93 சதவீதம், அணைக்கட்டு 62.76 சதவீதம், கீழ்வைத்திணான் குப்பத்தில் 55.52 சதவீதம், குடியாத்தத்தில் 44.38 சதவீதம், வாணியம்பாடியில் 46.71 சதவீதம், ஆம்பூரில் 50.86 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

179 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அங்கு பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 59 இடங்களில் துணை ராணுவத்தினர் ஆயுதங்களுடன் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொகுதி முழுவதும் 3 ஆயிரத்து 957 தமிழக காவல் துறையினர், 1,600 துணை ராணுவத்தினர், 400 ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.




Leave a Reply