BREAKING NEWS

வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி – சட்டசபையில் முதல்வர் எடப்பாடி சாமி தகவல்.

எம்-சாண்ட் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு தேவையான மணல் வாங்குவதற்கும், அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டசபையில் தொழில்துறை மானியக்கோரிக்கை மீது நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் எம்-சாண்ட் குறித்து கேள்வி எழுப்பினர்.

முதல்வர் பதில்

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசியதாவது:

எம்-சாண்ட் பற்றி உறுப்பினர் கேள்வி கேட்டார். ஆற்று மணல் மற்றும் ஓடையிலே இருக்கின்ற மணல் எல்லாம் கட்டுமானத்திற்காக மூன்று ஆண்டுகளிலே தடை செய்யப்பட்டு படிப்படியாக, எம்-சாண்டை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசு அறிவித்தது.

ஆனால், உங்களுடைய ஆட்சியிலும் ஆற்றிலிருந்து மணலை அள்ளி கட்டுமான தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டது. ஜெயலலிதா அரசிலும் கட்டுமானத்துக்கு ஆற்றிலும் ஓடையிலும் மண் அள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஏனென்றால் மணல் என்பது முக்கியமான அத்தியாவசியமான ஒரு பொருள். கட்டுமான தொழிலுக்கு நிச்சயம் அது தேவைப்படுகிறது.

மக்களுக்கு விழிப்புணர்வு

பொதுமக்களை பொறுத்தவரைக்கும், உடனடியாக எம்-சாண்டை பயன்படுத்த இயலாத சூழ்நிலை இருக்கிறது. கடந்த காலத்திலே, 10 சதவிகிதம் தான் எம்-சாண்ட் பயன்படுத்தி வந்தார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக, இப்பொழுது 40 சதவிகிதம் பேர் எம்-சாண்டை பயன்படுத்த துவங்கி இருக்கிறார்கள். இன்னும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவிகிதம் எம்-சாண்ட்டை பயன்படுத்தக் கூடிய அளவிற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

எத்தனை பேருக்கு இந்த எம்-சாண்ட் தயாரிக்கின்ற உரிமத்தை வழங்கியிருக்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள். தமிழகத்தில் மொத்தம் 24 எம்-சாண்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு பொதுப்பணித் துறையின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் குவாரிகள்

யார் யாரெல்லாம் இந்த எம்-சாண்ட் தயாரிப்பதற்கான ஆலைகளை நிறுவுகின்றார்களோ, அவர்களுக்கு எல்லாம் அரசு தாராளமாக உரிமை வழங்கும். அதாவது, அரசு நிர்ணயிக்கப்பட்ட விதிக்கு உட்பட்டு அவர்கள் விண்ணப்பம் செய்தால், அவர்களுக்கு அந்த உரிமத்தை வழங்குவதற்கு அரசு தயாராக இருக்கின்றது. இன்றைக்கு காலையில் கூட, நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார். ஏற்கனவே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே எத்தனை குவாரிகள் இருந்தன.

அத்தியாவசியானது

ஆகவே, இது மக்களுக்கு ஒரு அத்தியாவசியமான பொருள். கட்டுமான தொழிலுக்கு மிக மிக முக்கியமானது மணல். உடனடியாக நிறுத்த முடியாது. அரசாங்கத்தில் பல்வேறு கட்டுமானத் தொழில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. பொதுப்பணித் துறையாக இருந்தாலும் சரி, அல்லது நெடுஞ்சாலைத் துறையாக இருந்தாலும், கட்டுமானத்திற்கு தேவையான மணல் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. அதேபோல, பல்வேறு கட்டிடங்கள் இன்றைக்கு தமிழகத்திலே கட்டப்பட்டு வருகின்றது. அதற்கும் இந்த மணல் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஏழை எளிய மக்களுக்கு பசுமை வீடுகள், அதுமட்டுமல்லாமல், அரசால் ஏழை மக்களுக்கு கட்டித்தரப்படுகின்ற வீடுகள், இதற்கெல்லாம் மணல் மிக மிக முக்கியம்.

விதிகளுக்கு உட்பட்டு அனுமதி

ஆகவே, இதையெல்லாம் கருத்திலே கொண்டு தான், ஆற்றிலும், ஓடையிலும் அரசு விதிகளுக்கு உட்பட்டு, அந்த மணலை அள்ளி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு தேவையான மணல் வாங்குவதற்கும், அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே, இது அறிவிக்கப்பட்டு, வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு, டெண்டர் விடப்பட்டு, டெண்டரை பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Leave a Reply