BREAKING NEWS

வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு-  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

 

 

சின்னகல்லாரில் 7 செ.மீ., மழை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டியது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, கோவை மாவட்டம், சின்னகல்லாரில் 7 செ.மீ., மழை பெய்தது.

கோவை, நீலகிரியில் கனமழை

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், அடுத்த 24 மணிநேரத்தில் மலைப்பகுதிகளான கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மேகம் உருவாகக் கூடும். லேசான மழை ஒருசில இடங்களில் பெய்யக்கூடும்.

எச்சரிக்கை

தென்மேற்கு திசையிலிருந்து அவ்வப்போது 45 கி.மீ., வேகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் சூறைக்காற்று வீசும். தென்மேற்கு திசையிலிருந்து மேற்கு நோக்கி அவ்வப்போது 55 கி.மீ., வேகத்தில் தென்தமிழக கடலோர பகுதியில் வலுவான காற்று வீசும். இதன் காரணமாக, தென்தமிழக கடலில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 3.5 முதல் 4.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பும். எனவே, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படும். மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மழை விவரம்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டம் சின்னகல்லாரில் 7 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை பி.டி.ஓ.வில் 6 செ.மீ., வால்பாறை தாலுகா அலுவலகம், நடுவட்டம், உத்தமபாளையம், பெரியார், சிவகங்கையில் தலா 3 செ.மீ., தேவாலா, கூடலுார், அறந்தாங்கி, பரமக்குடி, சேலத்தில் தலா 2 செ.மீ., ஜெயம்கொண்டம், கூடலுார் பஜார், தேவக்கோட்டை, கே.வி.கே.காட்டுகுப்பம், திருவாலங்காடு, சேந்துறை, முஸ்ணத்தில் தலா ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




Leave a Reply