BREAKING NEWS

வெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 4-ந் தேதி தொடங்கிய கத்திரிவெயில், 28-ந் தேதி முடிந்த மறுநாள் முதல் சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இந்நிலையில், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வெப்பளவு குறைந்தது.

கனமழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும், சென்னை நகரிலும் மழை பெய்யலாம். தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன்கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, விழுப்புரம், நாமக்கல், புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களிலும் மழை பெய்யலாம். சென்னை நகரில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் குளச்சல், தக்கலையில் தலா 7 செ.மீ., மழை பெய்தது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ மற்றும் 50 கி.மீ வேகத்தில் தென் தமிழக கடலோரப்பகுதி்களில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, தென் தமிழக மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கையுடன் செல்லவும். அதேபோல, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதி்களில் பலத்த காற்று வீசக்கூடும்.

மழை விவரம்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் குளச்சல், தக்கலையில் தலா 7 செ.மீ., காஞ்சிபுரத்தில் 5 செ.மீ., ஓமலுார், ஆலங்காயம், போளூரில் தலா 4 செ.மீ., சேலம், குழித்துறை, செங்கம், சங்கராபுரத்தில் தலா 3 செ.மீ., சாத்தனுார் அணை, குடியாத்தம், மயிலம், ஆர்.கே.பேட்டை, ஆத்துார், இரணியல், வந்தவாசி, நாகர்கோவில், ஏற்காடு, ஆரணியில் தலா 2 செ.மீ., மற்றும் 20 இடங்களில் தலா ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு வானிலை மைய அதிகாரி கூறினார்.




Leave a Reply