BREAKING NEWS

வீட்டுக்கு ஒரு நூலகம்!

எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், பிரபலங்கள் என 190 பேர் இறையன்பு எழுதியுள்ள 50 க்கும் மேற்பட்ட நூல்களை ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகள், மொத்தம் 1014 பக்கங்களில் ‘இறையன்பு படைப்புலகம்’ என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக வெளிவந்தது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர்  எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி அரங்கில் 2014, பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்க விழாவில் மேற்படி நூலை வெளியிட்டுச் சிற்ப்பித்தவர், மேதகு, மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர், டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.

இந்த விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் போர்த்தொழில் பழகு, 10,000 மைல் பயணம், ஆத்தங்கரை ஓரம் ஆகிய இறையன்புவின் நூல்களில் உள்ள நயங்களை குட்டிக் கதைகளுடன் சுவாரஸ்யமாகப் பேசினார். ‘’இறையன்பு தேடித் தேடி நூல்களைப் படிப்பது எனக்கு ஆச்சர்யம் தருகிறது. புதிதாக ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி உருவாக வேண்டுமானால், அவருக்கு வழிகாட்டும் தகுதி இறையன்புக்கு இருக்கிறது. காஞ்சிபுரத்தில் பள்ளி சென்று படிக்க இயலாமல், சிறு வயதிலேயே நெசவு வேலையில் ஈடுபட நேர்ந்த சிறுவர் சிறுமிகளுக்காக இரவு நேரத்தில் பாடம் படிக்க இவர் துவக்கிய ‘நிலவொளிப் பள்ளி’ திட்டம், பிரமிக்க வைக்கும் ஒரு சிறந்த திட்டமாகும்!’’ என்று இறையன்புவின் பன்முக ஆளுமை குறித்துப் பாராட்டிப் பேசினார் எஸ். ராமகிருஷ்ணன்.

சிறப்பு விருந்தினரான அப்துல் கலாம் இறையன்பு படைப்புலகம் நூலை வெளியிட்டுக் கருத்தரங்கச் சிறப்புரை ஆற்றினார்:

’’உறக்கத்திலே வருவதல்ல கனவு; உன்னை                                                             உறங்க விடாமல் செய்வதுதான் கனவு!’’

-என்று அவர்  சொல்லச் சொல்ல டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி மாணவிகளும் விழாவுக்கு வந்திருந்தவர்களும் சத்தமாகத் திருப்பிச் சொன்னது விழாவின் ஹைலைட்!

இறையன்பு 50 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். சிறுவர் நூல்கள், நாவல்கள், கவிதை நூல்கள், என்று பல தளங்களில் நூல்கள் வெளிவந்துள்ளன. இவருடைய அறிவுத் திறன் அசாதாரணமானதாக இருக்கிறது. காரணம், அவர் படித்த நூல்கள். அவை அவரைச் செதுக்கியுள்ளன; ஆழ்ந்த அறிவாற்றலை அளித்துள்ளன.

இறையன்பு 23 போர் உத்திகளை 75 புத்தகங்கள் துணையுடன் ஆராய்ந்து ‘போர்த் தொழில் பழகு!’ என்ற தலைப்பில் ஒரு அற்புத நூலை எழுதியிருக்கிறார். போருக்கும் வாழ்க்கைக்கும் பல உத்திகள் இந்தப் புத்தகத்தில் கூறப் பட்டுள்ளன.

நல்ல புத்தகங்கள்தான் அறிவூட்டுபவையாக, வாழ்க்கையை மேம்படுத்துபவையாக  அமையும். மக்களின் வளர்ச்சிக்கு அடிப்படை, புத்தகங்கள்தான். நாம் படித்த நல்ல புத்தகங்கள் நாம் வாழ்க்கைப் பாதையில் கூடவே தொடர்ந்து வரக் கூடியவை.

தினமும் அரை மணி நேரமாவது புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பெரிய சாதனைகள் செய்தவர்களுக்கு நல்ல புத்தகங்கள்தான் அடிப்படையாக இருந்திருக்கின்றது.. தலை சிறந்த கணித மேதை சீனிவாச ராமானுஜம் 16-வது வயதில் சாதனை புரிந்தார். சிறிய வயதிலேயே நிறைய நல்ல புத்தகங்களைப் படித்தவர் அவர்.

பெற்றோர்களுக்கு நான் சொல்வது இதுதான்: உங்கள் குழந்தைகள் சாதனை ஏதும் செய்தால், பரிசளிப்பு, புத்தகங்களாகவே இருக்க வேண்டும். ஏனெனில், புத்தகங்களே உற்ற நண்பனாகத் திகழுபவை. உங்கள் வீட்டில் 10 புத்தகங்களையாவது வைத்து ஒரு நூலகம் அமைப்பது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஊக்கமும் ஆக்கமும் தரும் விஷயம் ஆகும்.

இந்த உறுதி மொழியை எல்லோரும் திருப்பிச் சொல்லுங்கள்:

‘’இன்று முதல், என் வீட்டில், 200 புத்தகங்கள் கொண்ட வீட்டு நூலகம் அமைப்பேன்! அவற்றில் 10 புத்தகங்கள் குழந்தைகள் படிக்கும் புத்தகங்களாக இருக்கும். என் குழந்தைகள் இந்த நூலகத்தை 200 புத்தகங்கள் கொண்ட நூலகமாக மாற்ற வேண்டும். இந்த வீட்டு நூலகத்தை என் பேரக் குழந்தைகள் 2000 புத்தகங்கள் கொண்டதாக மாற்ற வேண்டும். வீட்டு நூலகத்தை என் வாழ்நாளின் மதிப்பு மிக்க சொத்தாகப் போற்றிப் பாதுகாப்பேன்! ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் நானும் என் குடும்பத்தாரும் எங்கள் குழந்தைகளும் நல்ல நூல்களைத் தினமும் படித்துப் பயன் பெறுவோம்!’’ என்று தனது உரையில் கலாம் கூறிய வாசகங்களை உரத்த குரலில் மாணவிகளும் விழாவுக்கு வருகை தந்திருந்தவர்களும் திருப்பிக் கூறியது அரங்கம் அதிரும் அளவில் கடலின் பெரு முழக்கமாக ஒலித்தது.

ஓர் படைப்பாளிக்கு அவருடைய வாழ்நாளில், அவர் கண் முன்னாலேயே இப்படியொரு கருத்தரங்கமும் 190 பேர்கள் எழுதிய 1000 க்கு மேற்பட்ட பக்கங்களில் ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நூல் வெளியீடும், பாராட்டுகளும் நிகழ்ந்திருப்பது இதுவரை  தமிழ் கூறும் நல்லுலகத்தில் இறையன்புவின் படைப்புகளுக்கு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழா குறித்த செய்தியினை அன்று நான் பதிவு செய்தது என்றென்றும் மறத்தற்கரியதே.

– ஜே.வி.நாதன், எழுத்தாளார் மற்றும் மூத்த பத்திரிகையாளர்
Leave a Reply