BREAKING NEWS

வீடு தேடி வந்து பொருட்களை விநியோகம் செய்யும் ஜாஸ்பர் ரோபோ

மனித வாழ்க்கையில் தொழில்நுட்பம் நிகழ்த்துகின்ற மாற்றங்கள் வியப்பானது. பெரியவர்கள் மட்டுமல்ல, சிறியவர்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல ஆச்சர்ய விஷயங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அப்படியான ஆச்சர்ய விஷயம் இது.

சமீபத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் பொருட்களை எடுத்துச் சென்று விநியோகம் செய்யும் ரோபோவை சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தயாரித்துள்ளனர். முன்பெல்லாம் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடை கடையாக ஏறி இறங்க வேண்டும். இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும் அனைத்தும் வீடு தேடி வந்துவிடுகிறன்றன. நேரில் வாங்குவதை விட விலையும் குறைவு. இதன் அடுத்த கட்டம் தான் வீடு தேடி வந்து பொருட்களை விநியோகம் செய்யும் ரோபோ.

இந்த ரோபோவை ‘ஜாஸ்பர்’ என்று அழைக்கின்றனர். எஸ்.பி.ரோபோடிக்ஸ் என்ற பயிற்சி மையத்தில் பயிலும் பள்ளி மாணவர்கள் சேர்ந்து இந்த எந்திரனை உருவாக்கியுள்ளனர். 20 கிலோ எடை கொண்ட ஜாஸ்பரால், 10 கிலோ வரையிலான பொருட்களைத் தூக்கிச் செல்ல முடியும். செல்போன் ஆப் மூலம் ஜாஸ்பரைக் கட்டுப்படுத்தி, அது சரியான வழியில்தான் செல்கிறதா என்பதைக் கண்காணிக்க முடியும்.

ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்துவிட்டால் இரண்டு மணி நேரம் வரை இடைவிடாமல் ஜாஸ்பர் இயங்குகிறான். தற்போது பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் பாட்டில்களை விநியோகிக்கும் பணியில் ஜாஸ்பர் ஈடுபடுத்தப்பட்டுள்ளான். வருங்காலத்தில் கூகுள் மேப்புடன் இணைந்து, பொருட்களை வீட்டிற்கே சென்று விநியோகிக்கும் பணியில் ஜாஸ்பர் ஈடுபடுத்தப்படுவான். புதிய விஞ்ஞானிகளாக பரிணமித்திருக்கும் அந்த மாணவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.




Leave a Reply